150 ஆண்டுகளாக கோவிலை முதலை காவல் காக்கும் அதிசயம் பற்றி தெரியுமா ?

ananthapura-temple-crocodile-1

இவ்வுலகில் தோன்றிய அனைத்து உயிர்களுமே இறைவனின் அம்சமாகக் கருதுவது இந்தியாவில் தோன்றிய மதங்களின் கோட்பாடாகும். அதுவும் நம் இந்து மதத்தில் பிற உயிர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் ஏன் அதைப் படைத்த அந்த ஆண்டவனுக்கும் உதவியாக இருந்ததைப் பற்றி புராணங்களும், இதிகாசங்களும் போற்றுகின்றன. அந்த வகையில் அக்காலம் தொட்டு இக்காலம் வரை, அந்த ஆண்டவனுக்கு சேவை செய்கிற ஒரு விலங்கும், அவ்விலங்கினால் பிரசித்தி பெற்ற அக்கோவிலைப் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம்.

temple

நம் அண்டை மாநிலமான கேரளத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான “அனந்தபுரா கோவில்” உள்ளது. இக்கோவிலைச் சுற்றி பச்சைப் பசேல் என்று பாசிபடிந்தார் போலிருக்கும் குளத்தில் ஒரு முதலை வாழ்ந்து வருகிறது. அது “தெய்வீக அம்சம்” பொருந்திய முதலை என்று இக்கோவிலின் பக்தர்களும், இவ்வூர்மக்களும் கூறுகின்றனர். அதற்கு காரணம் “வில்வமங்கலம்” என்ற முனிவர் இங்கு தவம் புரிந்த போது அம்முனிவருக்கு, சிறுவன் வடிவில் காட்சி தந்த மஹாவிஷ்ணு இக்கோவிலின் குளத்தையொட்டி உள்ள ஒரு குகையில் சென்று மறைந்ததாகவும், அத்தகைய புனிதமான குகைக்குள் மற்ற மனிதர்கள் யாரும் செல்லாதவாறு, இறைவனின் கட்டளைப்படி இம்முதலை காவல் காப்பதாகவும் கூறுகிறார்கள்.

இம்முதலை தெய்வீக அம்சம் கொண்டது என்பதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன. ஏனெனில் முதலைகள் இயற்கையாகவே மாமிசம் உண்ணும் விலங்காகும். ஆனால் இக்குளத்தில் உள்ள இந்த முதலை இக்குளத்திலுள்ள மீன்களைக்கூட உண்டதில்லை என்றும், தினம் இருவேளை பூஜைகள் முடிந்து அரிசியால் செய்யப்பட்ட பிரசாதத்தை இக்கோவிலின் அர்ச்சகர், அக்குளத்தின் ஓரம் வந்து அம்முதலையை “பபியா” என்று பெயர்கூறி அழைத்து, பிரசாதத்தை முதலைக்கு தருகிறார் அதுவே அதற்க்கு உணவு. மேலும் இக்குளத்தில் அவ்வப்போது குளித்து வரும் இக்கோவிலின் அர்ச்சகரையோ, பக்தர்களையோ இது வரை இம்முதலை அச்சுறுத்தவோ, தாக்கவோ செய்தததில்லை என ஆச்சர்யமடைகின்றனர் இங்கு வழக்கமாக வருபவர்கள்.

temple crocodile

அதுமட்டுமல்லாது கடந்த 100 முதல் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இக்குளத்தில் ஒரு முதலை இறந்தாலும், மற்றொருமுதலை தோன்றுவதாகவும், முதலைகள் வாழும் பெரிய ஆறுகளோ, சதுப்பு நிலங்களோ இக்கோவிலுக்கு அருகாமையில் ஏதுமில்லாத போது, இங்கு இந்த முதலை தோன்றும் அதிசயத்தை கண்டு தாங்கள் வியப்பதாக கூறுகிறார்கள் இவ்வூர் மக்கள். இம்முதலையால் பிரசித்தி பெற்ற கோவிலை தரிசிக்க அம்மாநில மக்கள் அதிகளவில் வருகின்றனர். இக்கோவில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.