பேக்கிரி ‘நெய் பிஸ்கட்’! நம் வீட்டில் இருக்கும் 3 பொருட்களை வைத்தே செய்துவிடலாம். ஓவன் தேவையே இல்லை.

biscuts

பேக்கரிகளிலும், டீக்கடைகளிலும் விற்கும் நெய் பிஸ்கட் என்றால் எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். அந்த நெய் பிஸ்கட்டை நம் வீட்டிலேயே கூட செய்யலாம். ஓவன் தேவையே இல்லை. சுலபமாக, நம் வீட்டில் இருக்கும் 3 பொருட்களை வைத்து, பிஸ்கட் எப்படி தயாரிப்பது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்த ஒரு பிரிசர்வேட்டிவும் சேர்க்காமல், ஆரோக்கியமான இந்த பிஸ்கட்டை உங்கள் கையாலேயே செய்து, உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்! கட்டாயம் ஆரோக்கியமானதாக இருக்கும். நெய் பிஸ்கட் வீட்டிலேயே எப்படி செய்வது? பார்த்து விடலாமா!

biscut2

நெய் பிஸ்கட் செய்ய தேவையான பொருட்கள்:
சர்க்கரை – 100 கிராம்
கோதுமை – 150 கிராம்
நெய் – 100 கிராம்
ஏலக்காய் – 2

இந்தப் பொருட்களை எல்லாம் சரியான அளவு எடை போட்டு கலந்து கொண்டால், பிஸ்கட்டை பக்குவமாக செய்து எடுக்கலாம். அதாவது எந்தப் பொருளையும் குத்துமதிப்பாக சேர்க்காதீர்கள், எடை கணக்கில், சரியான விகிதத்தில்தான் சேர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக, நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.

cream

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து, அரைத்து எடுத்து கொள்ளுங்கள். அகலமான பாத்திரத்தில், நெய்யை ஊற்றி, ஒரு கரண்டியை வைத்தோ அல்லது விஸ்க்(whisk) வைத்தோ, நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். முட்டையை அடித்து கிளறவோம் அல்லவா? நெய்யை அடித்து கலக்கிய பின்பு, அதில் சர்க்கரையும் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். நெய்யும் சர்க்கரையும் சேர்ந்து, க்ரீம் பதத்திற்கு வந்துவிடும். இறுதியாக கோதுமை மாவை சேர்த்து, உங்கள் கைகளால் மிருதுவாக பிசைய வேண்டும். அழுத்தம் கொடுக்கக்கூடாது. சப்பாத்தி மாவு போல் பிசையக் கூடாது. குலோப்ஜாமூன் மாவு பிசைவது போல் சாஃப்ட்டாக மாவை கையாள வேண்டும். (ஆனால் மாவின் பதம், குலோப்ஜாமுன் மாவு பதத்தில் தளதளவென இருக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.)

- Advertisement -

ஒருவேளை உங்களுக்கு மாவு மிகவும் கெட்டியாக இருப்பது போல் தோன்றினால், கொஞ்சம் பால் விட்டு பிசைந்து கொள்ளலாம். பிசுபிசுவென்று கையில் ஒட்டக்கூடாது. அந்த பததிதிற்கு சரியான அளவில், மாவை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.  இந்த மாவில் 20 திலிருந்து 22 உருண்டைகள் வரை நமக்கு கிடைக்கும்.

biscut-mavu

தயார் செய்து வைத்திருக்கும், சிறிய சிறிய உருண்டைகளை உங்கள் உள்ளங்கைகளில் வைத்து, விரல்களால் மெதுவாக அழுத்தம் கொடுக்கவேண்டும். வேகமாக அழுத்தினால், ஓரங்களில் விரிசல் விட ஆரம்பிக்கும். நெய் பிஸ்கட் தடிமனில் இந்த உருண்டைகளை, தட்டி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

biscut1

அதன் பின்பாக, உங்கள் வீட்டில் இருக்கும் இட்லி பாத்திரத்தின் அடியில் தூள் உப்பை கொட்டி, நன்றாக சூடு செய்து, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, இட்லி தட்டில், கொஞ்சமாக எண்ணெய் விட்டு தடவி, தயார் செய்து வைத்திருக்கும் பிஸ்கட் தட்டைகளை, அடுக்கி வைத்து(ஒன்றன் மேல் ஒன்று வைத்து விடக்கூடாது. தனித்தனியாக அடுக்க வேண்டும்.), 20 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தீர்கள் என்றால் பிஸ்கெட் தயார்.

biscut

இட்லி பாணைக்கு பதிலாக, உங்கள் வீட்டில், தடிமனான ஃபிரையிங் பேன் இருந்தால் கூட, அந்த பேனை அடுப்பில் வைத்து முதலில் நன்றாக சூடு படித்துவிட வேண்டும். அதன் பின்பு இட்லி தட்டில் பிஸ்கட் மாவை அடுக்கி, பேன் உள்ளே வைத்து, மூடி போட்டு 20 நிமிடங்கள் வரை வேக வைத்தும் எடுக்கலாம். தடிமனான பேன் என்றால் உப்புக்கொண்ட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அடுப்பு சிம்மில் தான் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பிஸ்கட்டின், அடியில் கருக வாய்ப்பு உள்ளது.

gothumai-biscut

பிஸ்கட்டை அடுப்பிலிருந்து எடுத்ததும், சூடாக இருக்கும் போது, சாஃப்ட்டாக தான் இருக்கும். பிஸ்கட் நன்றாக ஆறிய பின்பு சுவைத்துப் பாருங்கள். கடைகளில் வாங்கிய சுவையை விட, உங்கள் கைகளால் நீங்களே செய்த இந்த பிஸ்கடின், ருசி அதிகமாகத்தான் இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய குழந்தைகளுக்கு இந்த பிஸ்கட் மிகவும் பிடிக்கும்.

இதையும் படிக்கலாமே
’10 நிமிடத்தில்’ மீந்து போன ஒரு கப் சாதம் இருந்தால் சுவையான ‘அல்வா’ செய்து விடலாமே! உடனே செய்து அசத்திருங்க.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.