உலக அழிவின் தொடக்க நாள் அடுத்த வாரம் வருகிறதா ?

world last day

ஏப்ரல்-23: உலக அழிவுக்கான தொடக்கமா? “அட போங்கபா… அரச்ச மாவையே அரச்சுட்டு. இன்னும் எத்தனை பேரு இப்படிக் கெளம்பிருக்கீங்க?. உங்களுக்கு வேற பொழப்பே இல்லையா…?”

globe

இதுபோன்ற கேள்விகள் கேட்பது புரிகிறது. இந்தச் சதிக்கோட்பாட்டாளர்கள் சும்மா இருந்தால் தானே. வானில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்கள் அனைத்துக்கும் ஒவ்வோர் வடிவம் உண்டு. தராசு வடிவம் (Libra Constellation), சிங்க வடிவம் (Leo Constellation), கன்னி வடிவம் (Virgo Constellation), ஹெர்கியூலிஸ் வடிவம் (Hercules Constellation) இப்படிப் பல வடிவங்கள் உண்டு.

இதில் விர்கோ எனப்படும் கன்னி வடிவம் ஒன்று உண்டு. அதில் நட்சத்திரங்கள் ஒரு பெண் நிற்பதைப் போன்ற தோற்றதைத் தருவதோடு, சில நட்சத்திரங்கள் கன்னியின் தலையில் கிரீடம் போலவும் இருக்கும். பூமியில் இருந்து பார்த்தால் கிரகங்கள் நகரும்போது அந்த வடிவத்தில் சூரியன் கன்னியின் தலைக்குப் பக்கமும், வியாழன் கன்னியின் கால்களுக்கு நடுவிலும், நிலவு காலுக்கடியிலும் என்று கிட்டத்தட்ட மூன்றும் நேர்க்கோட்டில் வரும்போது உலகம் அழிவதற்குத் தகுந்த நிகழ்வுகள் நடக்கத் தொடங்கி சிறிது சிறிதாக நியாயத் தீர்ப்பு நாள் (Judgement Day) எனப்படும் உலகின் கடைசி நாள் நெருங்குமாம். இந்த அமைப்பு வருகிற 23-ம் தேதி நடக்கப்போகிறதாம். தற்போது உலகளவில் நடந்துகொண்டிருக்கும் அசம்பாவிதங்கள்கூட இதற்கான அறிகுறிகள்தானாம். இதையெல்லாம் சொல்பவர் டேவிட் மீடே (David Meade) என்பவர்தான். இவர் ஒரு சதிக்கோட்பாட்டாளர் (Conspiracy theorists). இதற்கு அவர் பைபிளில் இருக்கும் திருவெளிப்பாடு 12:1-2ஐ எடுத்து மேற்கோள் காட்டுகிறார். அந்த வெளிப்பாடு கூறுவதாக அவர் கூறுவதாவது, “சூரியனை ஆடையாக உடுத்திய ஒரு பெண், காலடியில் நிலவை வைத்துக்கொண்டு பன்னிரண்டு நட்சத்திரங்களை மகுடமாக சூடிக்கொண்டு நிற்பாள்”

அவர் சொல்வது இருக்கட்டும். உண்மையில் இந்த வடிவங்கள் தோன்றுவதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம்.

நட்சத்திரங்கள் நமது பால்வெளி மண்டலத்தில் ஒரு தொகுப்பாக நகர்ந்துகொண்டே இருக்கும். அதுவே நமது அண்டம் சுருள் வடிவம் (Spiral)) என்று கூறுவதற்கு ஒரு ஆதாரமாகக் கூறப்படுகிறது. அப்படி நகரும் நட்சத்திரங்கள் தமக்குள்ளாகவே சிற்சில குழுக்களாக பிரிந்திருக்கும். அது ஏனென்றால் அவை அனைத்தும் நமது சூரிய குடும்பத்தைப் போன்றதுதான். நமக்கு நீள்வட்ட அமைப்பு இருப்பதுபோல் அவற்றுக்கும் ஒவ்வோர் வடிவம் உண்டு. அவை நகர்ந்துகொண்டே இருக்கின்றன. நமது அண்டமும் (Galaxy) தான். இப்படிக் கூட்டமாக இருக்கும் மற்ற குடும்பங்கள் நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது நட்சத்திரக் கூட்டங்களாகத் தெரியும். நமக்கு அருகிலிருக்கும் சில அண்டங்கள் (Galaxies) கூட இவ்வாறான நட்சத்திரக் கூட்டங்களாகத் தெரியும். உதாரணத்துக்கு ஆண்ட்ரோமீடா (Andromeda Galaxy) என்பது வானில் ஒரு பெண் தனது இரு கைகளையும் தூக்கிக்கொண்டும், ஒரு காலை மடக்கியவாறும் நிற்பது போல் இருக்கும். அது நமக்கு அருகாமையில் இருக்கும் ஒரு அண்டம்.

- Advertisement -

stars

இன்னொரு உண்மை என்னவென்றால் இரவு நேரங்களில் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் எதுவும் அந்தச் சமயத்தில் அங்கு இருப்பவையே அல்ல. அவை ஒரு வருடத்துக்கு முன் அங்கு இருந்தவை. நமது பால்வெளி அண்டம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் அகலம் கொண்டது. அதில் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் சில ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கின்றன. அதன் ஒளி பூமியை வந்தடைய சில வருடங்கள் ஆகும். அதற்குள் அது நகர்ந்து வேறு இடத்துக்குச் சென்றுவிடும். ஆகையால் நமது கண்களை அந்த நட்சத்திரங்களின் ஒளி வந்தடையும் நேரத்தில் அங்கே எதுவும் இருப்பதில்லை. ஆம், நீங்கள் பார்ப்பது கடந்த காலத்தை. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நீங்கள் பார்க்கும் சில நட்சத்திரங்களின் ஒளி நம் கண்களை வந்தடைவதற்குள் அழிந்தே போயிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. இது விஞ்ஞானம் கூறும் நிரூபிக்கப்பட்ட கூற்று.

கதை இப்படியிருக்க, இல்லாத நட்சத்திரத்தை வைத்து இருக்கும் பூமிக்கு எப்படி ஜோசியம் பார்க்க முடியும். இவர்கள் சொல்வது உண்மைதானா. பூமி, நிலா, வியாழன் மூன்றும் அந்தத் தேதியில் வருமா என்பதை அறிந்துகொள்ள விஞ்ஞானிகள் தொலைநோக்கி வழியாக ஆராய்ந்து பார்த்தார்கள். அவர்கள் கூறும் ஜோசியம் பலிக்குமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அப்படி ஒரு நிகழ்வே நிகழப்போவதில்லை.

ஏனென்றால், வியாழன் அந்தச் சமயத்தில் லிப்ரா (Libra Constellations) எனப்படும் தராசு வடிவ நட்சத்திரக் கூட்டங்களின் மத்தியில்தான் காணப்படும். நிலா கேன்சர் (Cancer Constellations) என்ற நட்சத்திரக் கூட்டத்துக்கு அருகில் இருக்கும். அட சூரியனாவது அவர்கள் கூறும் கன்னி வடிவத்தில் இருக்குமா என்றால் அதுவும் கிடையாது. அந்தத் தேதியில் ஆரிஸ் (Aries), சீடஸ் (Cetus), ஆண்ட்ரோமீடா (Andromeda) என்ற மூன்று நட்சத்திர வடிவங்களுக்கு நடுவில் தான் சூரியன் வருகிறது.

stars

இதைப்போல் அன்றாடம் நட்சத்திரங்கள், கிரகங்களின் அமைப்பை நீங்களும் தெரிந்துகொள்ள முடியும். The Sky Live’s Planetarium என்ற இணையத்தைப் பயன்படுத்தி நீங்களும் முயற்சி செய்துபாருங்கள்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவியல் வளர்ந்துகொண்டே இருக்க, சில மக்கள் எதையும் ஆராயாமல் இவர்களையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறு இயற்கைக்கு மாறான கருத்துகளைக் கூறுவதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்ள முடியுமே தவிர பயனேதும் விளைந்துவிடாது. இத்தகைய “அறிவுஜீவி” சாமியார்கள் நம் ஊரிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். மனதளவில் பலவீனமானவர்களை எளிதில் ஈர்க்கும் வகையான பேச்சுக்களால் இவர்களைப் போன்றவர்கள் விளம்பரம் தேடிக்கொள்வதோடு மட்டும் நிற்காமல் அவர்களை நம்பும் மக்களையும் பகுத்தறியும் திறனற்ற மூடர்களாக்கி விடுகிறார்கள்.