சுக பிரசவம் அருளும் சித்தர் கோவில் – வீடியோ

kasavanampatti sidhar

“சித்தன் போக்கு சிவன் போக்கு” என்று பொதுவாக சொல்லப்படும் ஒரு வாக்கியமாகும். ஆதிசித்தனாகிய அந்த சிவபெருமானை நம்மால் எப்படி முழுமைமையாக அறிந்து கொள்ள முடியாதோ அதுபோலவே அவரின் சீடர்களான சித்தர்களின் வழிமுறைகளைப் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் எவரும் இல்லை. பொதுவாக இயற்கை வளங்கள் நிறைந்த காடுகள், மலைகள் போன்றப் பகுதிகளையே சித்தர்கள் வசிப்பதற்குத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் ஆபூர்வமாக ஒரு சிலர் மக்களுடனேயே வாழ்ந்து அவர்களுக்கு பல நன்மைகளைச் செய்துள்ளனர். அப்படியான ஒருவரைப் பற்றிய இக்காணொளியைக் காண்போம்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள “கசவனம்பட்டி” என்ற ஊரில் “மௌன சாமிகள்” என்றழைக்கப்படும் சித்தர் பல காலம் வாழ்ந்து, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அங்கேயே “ஜீவசமாதி” அடைந்தார். அங்கு அவருக்கென்று ஒரு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த சித்தர் அவர் பிறந்ததிலிருந்து, முக்தியடையும் வரை தன் வாழ்நாளில் ஒருபோதும் ஆடை உடுத்தாமல் “திகம்பரராக” வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

இவரை வழிபடும் பக்தர் ஒருவரின் மனைவிக்கு குழந்தைப் பிறப்பின் போது பிரச்சனை இருந்ததாகவும், “மௌன சாமிகளின்” அருளால் அப்பிரச்சனை தீர்ந்து, சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்ததாகவும் கூறுகிறார். மேலும் இங்கு வழிபட வரும் பக்தர்கள் ஊதுபத்தி, கற்பூரத்திற்கு பதிலாக சாமிகள் வாழ்ந்த காலத்தில் அவர் விரும்பி புகைத்த “சிகரெட்டை” பத்திக்குப் பதிலாக கொளுத்தி அவரின் சிலைக்கருகே வைக்கின்றனர். அந்த சிகரெட் எரிந்த பின் மீளும் அச்சாம்பலை விபூதிக்குப் பதிலாக எடுத்துச் செல்கின்றனர்.

மௌன சாமிகள் தன் இறுதி காலத்தில், 48 நாட்கள் உணவேதும் அருந்தாமல் தன் உலக வாழ்வை முடித்துக்கொண்ட, அவரின் ஆன்மிக வைராக்கியத்தை அவரது பக்தர்கள் அனைவரும் போற்றுகின்றனார். சித்தர்களைப் பணிவோர்க்கு சித்தம் தெளியும்.