அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை ஒரு வாட்டி இப்படி போட்டு குடித்து பாருங்க! உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி உடனடியாக கிடைக்கும்.

lemon-juice

வெயில் சீசன் தொடங்கிவிட்டது. நம்முடைய உடலுக்கும், நாவிற்கும் குளிர்ச்சி தரக்கூடிய இயற்கையான நீர் சத்து நிறைந்த பொருட்களை குடிப்பது தான் நல்லது. தொண்டை வறண்டு போகிறது. ஜில் என்ற கூல் ட்ரிங் தேவைப்படுகிறது என்ற உடனேயே செயற்கையான பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு, நீர்மோர், லெமன் ஜூஸ், இயற்கையாக கிடைக்கும் பழங்களின் சாறு, நீராகாரம் போன்ற பொருட்களை குடித்தால் உடலில் எப்போதுமே நீர்ச்சத்து நிறைந்திருக்கும். அந்த வரிசையில் இன்று மிக மிக எளிமையான முறையில் ஒரு லெமன் ஜூஸை வித்தியாசமாக எப்படி போடலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

lemon-juice1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு அதில் பிழிந்து கொள்ள வேண்டும். அதன்பின்பு புதினா இலை – 2, சிறிய அளவிலான இஞ்சி துண்டு, சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன், ஒரே ஒரு தேங்காய் பத்தை, இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஒட்டிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு, அந்த மிக்ஸி ஜாரில் இருக்கும் கலவையில், 3 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, அதன் பின்பு உங்களுக்கு தேவைப்பட்டால் எலுமிச்சைபழ தோளில் ஒரு சிறிய துண்டை எடுத்து அந்த தண்ணீரோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது நான்கில் ஒரு பங்கு சின்ன துண்டு எலுமிச்சம் பழத்தோலை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள்.

தண்ணீர் சேர்த்து மிக்ஸியை நன்றாக அரைக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு, விட்டு விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதில் தேங்காய் பத்தையை நாம் சேர்த்திருப்பதால், இதனுடைய சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அந்த தேங்காய் பத்தை முழுமையாக அறையும் வரை மிக்ஸியை ஓட விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். எலுமிச்சைச் சாறு பிழியும் போது, அதனுடைய கொட்டையை கட்டாயம் நீக்க வேண்டும். இல்லை என்றால் ஜூஸ் கசப்பாக இருக்கும்.

இந்த ஜூஸை நன்றாக வடிகட்டி கொள்ள வேண்டும். இதை அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்தும் குடிக்கலாம். அப்படி இல்லையென்றால் ஐஸ் வாட்டர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். ஐஸ் க்யூப் சேர்த்துப் பரிமாறலாம். இந்த லெமன் ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, இதைக் குடித்த அடுத்த நிமிடமே நம்முடைய உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும்.

lemon-juice2

இந்த ஜூஸில் தேங்காய் பத்தைக்கு பதிலாக ஐந்து முந்திரி பருப்புகளையும் சேர்த்து ஜூஸ் செய்யலாம். தேவைப்படுபவர்கள் சர்க்கரையோடு கொஞ்சம் உப்பை சேர்த்து ஜூஸ் போடும் போது இதன் சுவையில் கொஞ்சம் வித்தியாசம் தெரியும். பெரும்பாலும் இந்த ஜூஸை கேரளாவில் அதிகமாக செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.