சுவையான பாவக்காய் குழம்பு ஒருவாட்டி இப்படி வெச்சு பாருங்க! பாவக்காய் சாப்பிடாதவர்கள் கூட, கட்டாயம் இந்த குழம்பை சாப்பிடுவாங்க.

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் கசப்பு நிறைந்த பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பேருக்கு இந்த பாவக்காய் பிடிக்காது. இருப்பினும் இந்த முறைப்படி பாவக்காயை, புளி குழம்பு வைத்து கொடுத்துப் பாருங்கள். உப்பு புளிப்பு காரம் கசப்புத்தன்மை கலந்த இந்த குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். சுவையான ஆரோக்கியமான பாவக்காய் குழம்பு எப்படி வைப்பது என்று பார்த்துவிடலாம். இந்த பதிவின் இறுதியில், எல்லா வகையான காரக்குழம்பு வகைகளையும் சூப்பராக வைக்க ஒரு சின்ன டிப்ஸ்.

pavakai

Step 1:
ஒரு கடாயில் நான்கிலிருந்து ஐந்து டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, பாகற் காயை வட்ட வடிவில் வெட்டி அந்த எண்ணெயில் போட்டு 1/2 ஸ்பூன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, பொன்நிறம் வரும் அளவிற்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மிதமான தீயில் மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வறுத்து எடுத்தால் போதுமானது. வறுத்த அந்த பாகற்காயை எண்ணையிலிருந்து வடித்து, எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டு தக்காளியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சிறிய எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து புளி கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

pavakai1

Step 2:
அடுத்ததாக கடாயில் இருக்கும் மீதமுள்ள அந்த எண்ணெயில் கடுகு அல்லது வெங்காய வடகம் தாளித்து கொள்ளுங்கள். அதன்பின்பு வெந்தயம் – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 6, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல், இவைகளை ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது தக்காளியின் பச்சை வாடை போகும் அளவிற்கு வெங்காய விழுதோடு சேர்த்து, தக்காளி விழுதையும் வதக்கி விட வேண்டும். ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் வதக்கி விட்டால் போதும்.

onion

அதற்கு அடுத்த படியாக மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், தனியாத்தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உங்களுடைய வீட்டில் மசாலாப் பொருட்கள் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் குழம்பு மிளகாய் தூள் இருந்தால் அதிலிருந்து இரண்டு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். குழம்பு மிளகாய்த்தூள் இல்லை என்றால், மிளகாய் தூள் தனியா தூள் காரத்திற்கு ஏற்றவாறு அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். மசாலாப் பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கிய பின்பு, கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். புளி கரைசலை ஊற்றி உடனேயே தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

puli-karaisal

Step 3:
ஐந்து நிமிடம் கொதித்த அந்தக் குழம்பில் வறுத்து வைத்திருக்கும் பாகர் காய்களை சேர்த்து ஒரு முறை கலக்கி விட்டு, மூடி போட்டு மீண்டும் ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இருதியாக குழம்பை இறக்குவதற்கு முன்பு அரைஸ்பூன் மிளகுத்தூளை தூவி, கிளறிவிட்டு இறக்கினால் கமகம பாகற்காய் குழம்பு தயார்.

vendhaya-kuzhambu

பின் குறிப்பு: நாம் பாகற்காயை எண்ணெயில் போட்டு உப்பு சேர்த்து வறுக்கும் போது, அதனுடைய கசப்புத்தன்மை குறைந்திருக்கும். உப்பு புளி காரம் அளவைக் கொஞ்சம் தூக்கலாக சேர்த்துக் கொண்டீர்கள் என்றால், கசப்பின் தன்மை குறைவாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தக்காளியை பொடியாக நறுக்கிப் போட்டும் வதக்கிக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். அப்படி ஒரு தக்காளியை வெங்காயத்தோடு போட்டு வதக்கினாளும், ஒரு தக்காளியை நீங்கள் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலோடு சேர்த்து, உங்களது கையாலேயே கரைத்துவிட்டு, குழம்பு வைத்து பாருங்கள். குழம்பின் ருசி அதிகமாக இருக்கும். எந்த வகையான கார குழம்பு வைத்தாலும், தக்காளியை, புளிகரைசலோடு, சேர்த்து கரைத்து வைப்பது அதிக சுவையை தரும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால், உங்களுடைய வீட்டிலும் இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
பெண்கள் கையில் இருக்கும் பணம், சிக்கனமாக செலவாக வேண்டும் என்றால், அவர்கள் எந்தெந்த விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.