பாலகனாய் வந்து நேரில் பால் குடித்த பெருமாள் பற்றி தெரியுமா ?

perumal-1

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டுக்கு அருகில் உள்ள கோட்டைப்பட்டியில் உள்ள மலையின்மீது இருக்கிறது ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில். இந்த மலைமீது தனக்கு கோவில் கட்ட வேண்டும் என்று பெருமாளே நேரில் வந்து சொல்லி இருக்கிறார். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

sendraya perumal

பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்தப் பகுதியில் ராஜகம்பளத்தார் வழியில் வந்த சென்னமநாயக்கர் என்பவர் பெரும் செல்வந்தராக இருந்தார். 60 வயதைக் கடந்த அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஒருநாள், மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளில் கன்று போடாத ஒரு பசு மட்டும் திரும்பவில்லை என்பதை அறிந்து, அந்தப் பசுவைத் தேடிச் சென்றார்.

அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த மலைப் பகுதியில் ஓர் இடத்தில் அந்தப் பசுவைக் கண்டார். என்ன ஆச்சர்யம்! கன்று ஈனாத அந்தப் பசுவின் மடியில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பாலகன் பால் அருந்திக் கொண்டு இருந்தான்.

pasu

இயற்கைக்கு மாறாக நடைபெற்ற அந்தக் காட்சியைக் கண்டு திகைத்துப் போனார் சென்னம நாயக்கர். அவருக்கு, தான் சென்றாயப் பெருமாளே என்பதை உணர்த்தி, அங்கேயே கோயில் கொள்ள விரும்புவதாகவும், அவரும் அவருடைய வம்சத்தில் வந்தவர்களுமே தனக்குப் பூஜைகள் செய்யவேண்டும் என்றும் கூறினான் அந்த பாலகன்.

- Advertisement -

வம்சமே இல்லாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு இறைவனின் அருளால் ஒன்றல்ல, ஆறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்த பிள்ளையே கோயிலில் பூஜை செய்யும் பாக்கியம் பெற்றவர். இன்றளவும் அப்படித்தான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்தக் கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

perumal

கோவிலின் சிறப்பு
சென்றாயர் மூலவர் சந்நிதியின் வலப்புறத்தில், குழந்தை வடிவில் காட்சி தந்த சுவாமி, பசுவிடம் பால் குடித்த இடத்தில் ஒரு மண்டபம் அமைந்துள்ளது. அந்த மண்டபத்தின் மேடையில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள மேடையின் இரு மூலைகளிலும் தங்கள் கைகளை வைத்து வழிபடுகின்றனர். கண்களை மூடி வேண்டுதலை இறைவனிடம் கூறும் சமயத்தில் தங்கள் இரு கைகளும் சற்று நேரத்தில் தானாகவே ஒன்றாக கூடிவிடும். நம் வேண்டிய பிரார்த்தனை நிறைவேற சுவாமி நமக்கு அளிக்கும் உத்தரவாதமாக மக்கள் இதை நம்புகின்றனர்.

perumal

சென்றாயப் பெருமாளை பாலகன் ரூபத்தில் வழிபட்டாலும் இவர் முறுக்கு மீசையும், தாடியும் கொண்ட உருவத்தோடு காட்சி அளிப்பதும், இறைவன் தனது இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி காட்சி அளிப்பதும், இந்த கோவிலில் வித்தியாசமான ஒரு அமைப்பு. இந்த பெருமாளுக்கு இரு கைகளிலும் சங்கு சக்கரம் கிடையாது. இந்த கோவிலில் அம்பாள் சந்நிதியும் கிடையாது. பெருமாளுக்கு உரிய அம்சங்கள் இல்லாமல், வித்தியாசமான தனித்துவங்களை அடங்கியது இந்த கோவில். ஆனால் ஓணம் பண்டிகை அன்று நடைபெறும் திருவிழா பூஜையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு அணிவித்த மாலையை கொண்டு வந்து இங்குள்ள பெருமாளுக்கு சாத்துகின்றனர். பக்தர்களுக்கு ஓடிச்சென்று அருள் புரிபவர் என்பதால் இந்த கடவுளுக்கு ‘சென்றாயப்பெருமாள்’ என்ற பெயர் வந்தது.

இந்த சென்றாய பெருமாள் பாலகன் என்பதால் கிருஷ்ணர் அம்சமாக நினைத்து முறுக்கு, சீடை, அதிரசம் போன்றவற்றை படையலாக படைக்கின்றனர். வாரம்தோறும் சனிக்கிழமைகளில் இங்கு கிருஷ்ண லீலை, ராம அவதாரம் பற்றிய பஜனைப்பாடல்களை பாடி இறைவனை வழிபடுகின்றனர்.