அமைச்சர் வருகைக்காக காத்திருந்த மீனாட்சி அம்மன் – கொதிக்கும் மக்கள்

temple
- Advertisement -

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஆன்மீக பெருமக்களையும், பொதுமக்களையும் மனம் நோகவைக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்துள்ளதைப் பலரும் கூறிவருகிறார்கள்.

kovil ther

இதுபற்றி நம்மிடம் பேசிய பக்தர் ஒருவர், ”நேற்று(27/04/2018) நடந்த திருக்கல்யாணத்தில் சுவாமியை வணங்க பொதுமக்களிடம் கெடுபிடிகாட்டி, அரசியல்வாதிகள், அரசுஅதிகாரிகள், காவல்துறையினர் குடும்பங்களுக்கு முக்கியத்துவம்கொடுத்தார்கள். அதேபோல, இன்றைய தேரோட்ட நிகழ்ச்சிக்கு, அதிகாலை முதல் காத்திருந்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருகைக்காக தேரை நிறுத்திவைத்திருந்தது அதைவிடக் கொடுமையானது. இங்கு மக்கள் மட்டுமல்ல, சாமியும் காத்திருந்தது. சரியாக 6 மணிக்கு தேர் இழுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 40 நிமிடம் தாமதமாக தேர் இழுக்கப்பட்டது. இதென்ன ஆண்டான் அடிமை காலமா, அமைச்சர் வந்து கை வைத்தால்தான் தேர் ஓடனுமா? மீனாட்சியம்மன் கோயிலுக்கு எவ்வளவோ அறப்பணிகள் செய்த பி.டி.ஆர் அமைச்சராக இருந்தபோதுகூட, அவருக்காக கோயில் நிகழ்ச்சி எதுவும் நிறுத்திவைக்கப்பட்டதில்லை.

- Advertisement -

இது, எல்லோரையும் வேதனைப்படவைத்துள்ளது. அடுத்து, சித்திரைத் திருவிழாவுக்காக பல லட்சம் ஒதுக்கி சிறப்பான ஏற்பாடுகள் செய்துவருவதாகக் கூறினார் மாநகராட்சி கமிஷனர். தினமும் கோயிலை சுற்றிச் சுற்றி வந்தார். மேலமாசி வீதியில் சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை பள்ளத்தில் அம்மன் தேர் சிக்கியது. ஒரு மணி நேர போராட்டத்துக்குப்பின் அது சரிசெய்யப்பட்டு, மீண்டும் தேர் கிளம்பியது. அதற்கு முன்பு, தேர் வடம் பிடித்தவர்களுக்கும் போலீஸுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதிலும் தேர் ஓட தாமதமானது. இப்படி, சரியான திட்டமிடல் இல்லாமல் சுவாமியைக் காக்கவைத்தல், மக்களை மதிக்காத வண்ணம் செயல்படுதல் போன்றவற்றால், இன்று தேரோட்டத்தில் சில தடங்கல்கள் ஏற்படுத்தி, மீனாட்சி தாய் நம்மக்கு உணர்த்தியிருக்கிறாள் ” என்றார்.

- Advertisement -