பாரம்பரிய முறையில் கிராமத்து ‘புளிச்ச கீரை கடையல்’ இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க அப்பறம் விடவே மாட்டீங்க!

pulicha-keerai-kadaiyal2
- Advertisement -

கீரை வகைகளில் மிகவும் வித்தியாசமான கீரை புளிச்சக்கீரை. வாயில் வைத்தாலே அப்படி ஒரு புளிப்பு இதனிடத்தில் இருப்பது என்பது அதிசயம் தான். இயற்கை அன்னை கொடுத்த கொடைகளில் இந்த புளிச்சக்கீரையும் ஒன்று. அறுசுவைகளில் இருக்கும் புளிப்பு இந்தக் கீரையில் நிறைந்து இருக்கும் வரப்பிரசாதம். சிலருக்கு சரியாக இந்தக் கீரையை கடைய தெரியாமல் செய்து கீரை மீது வெறுப்பு வந்திருக்கும். பாரம்பரிய முறையில் கிராமத்து வாடையில் புளிச்சக்கீரையை இந்த முறையில் ஒரு முறை வைத்து பாருங்கள்! அதன் பிறகு இந்தக் கீரையை நீங்கள் அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்! சரி புளிச்ச கீரையை எப்படி சமைப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

pulicha keerai

‘புளிச்ச கீரை கடையல்’ செய்ய தேவையான பொருட்கள்:
புளிச்ச கீரை – 1 கட்டு
பச்சை மிளகாய் – 8
வர மிளகாய் – 6
நறுக்கிய மல்லி – 1 கைப்பிடி அளவிற்கு

- Advertisement -

பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பூண்டு – ஒரு கைப்பிடி அளவிற்கு
கருவடகம் – 2 உருண்டை

onion-vadagam1

எண்ணெய் – தேவையான அளவிற்கு
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவிற்கு

- Advertisement -

‘புளிச்ச கீரை கடையல்’ செய்முறை விளக்கம்:
முதலில் புளிச்சக்கீரையை ஒன்றிரண்டு முறை நன்கு தண்ணீரில் அலசி வடிகட்டி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கீரையை சேர்த்து, பச்சை மிளகாய்களை போட்டு வேக விடுங்கள். அதற்குள் நறுக்க வேண்டிய காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

pulicha-keerai-kadaiyal

கீரை நன்கு வெந்து வந்ததும் மத்து கொண்டு நன்கு கடைய வேண்டும். பின்னர் மல்லி தழைகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு மைய்ய கடைந்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வர மிளகாயை கிள்ளி போடவும். மிளகாய்கள் லேசாக வறுபட்டதும், கருவடகம் உங்களிடம் இருந்தால் உதிர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் விட்டு விடலாம்.

pulicha-keerai-kadaiyal1

பின்னர் நறுக்கி வைத்துள்ள பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு சிவக்க வறுக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம், தக்காளி மசிந்து வர கடைந்து வைத்துள்ள கீரையை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் கீரையை அப்படியே ஒரு கொதி வரும் வரை வேக விடுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாற வேண்டியது தான். சுடச்சுட சுவையான புளிச்ச கீரை கடையல், சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடும் பொழுது அலாதியான சுவை நாவின் நரம்புகளை தூண்டச் செய்யும். இப்படி ஒரு முறை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -