இட்லி சட்டி இருந்தால் போதும்! ஆரோக்கியமான சூப்பர் ‘ராகி புட்டு’ செஞ்சிடலாம்.

vendha kelveragu

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கேவுரு மாவில் செய்யும் ராகி புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும். குழந்தைகளுக்கு இந்தப் புட்டு மிகவும் பிடிக்கும். இனிப்பு சேர்த்து செய்கிறோம் அல்லவா? ஆனால் சில பேர் வீட்டில் புட்டு செய்வதற்கு சிரமப்படுவார்கள். ஆவி கட்டி, வேக வைக்கவேண்டும் என்ற சிரமம்தான்! ஆனால், சிரமமே இல்லாமல் இட்லி பானையில், ராகி புட்டை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vendha kelveragu

முதலில் 2 கப் அளவு ராகி மாவை எடுத்துக் கொள்ளவேண்டும். ஆழாக்கு இருந்தாலும், அதில் 2 ஆழாக்கு, அளவு ராகி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அகலமான பாத்திரத்தில் போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து உங்கள் கைகளால் கொஞ்சம் கொஞ்சமாக பிசைந்து கொடுக்க வேண்டும். தண்ணீரை ஊற்றக்கூடாது. டேபிள்ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு தான் மாவை பக்குவமாக பிசைய வேண்டும்.

தண்ணீர் தெளித்து பிசைந்ததும், ராகி மாவை, கைகளில் எடுத்து அழுத்தி, கொழுக்கட்டை போல் பிடித்தால், அப்படியே நிற்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருக்கும் பக்குவத்தை பார்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் தெளித்து பிசையும்போது, ராகி மாவில், சிறு சிறு கட்டி பிடித்து இருக்கும். அந்த கட்டிகளை எல்லாம் நன்றாக உடைத்து, பிசைந்து, மாவை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

puttu-mavu

அதன் பின்பாக இட்லி சட்டியில், தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும். இட்லி தட்டின் மேல், எப்பவும் போல் இட்லி துணியை போட்டு, அதன்மேல் தயார் செய்து வைத்திருக்கும் இந்த மாவை பரவலாக வைத்துவிடவேண்டும். இந்தத் தட்டை அப்படியே இட்லி பானையில் வைத்து 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்தால் போதும். சூப்பரான புட்டு தயாராகிவிடும். 20 நிமிடம் கழித்து கையில் தண்ணீரை தொட்டு, புட்டை எடுத்து நசுக்கி பார்த்தால், கையில் ஒட்டாத பதத்திற்கு வரும். அப்போது புட்டு தயாராகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

துணியில் இருக்கும் புட்டை, ஒரு  பாத்திரத்திற்கு மாற்றி, உதிரி உதிரியாக கரண்டியால் உடைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு தேவையான அளவு தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ள வேண்டும். புட்டு மிதமான சூட்டில் இருக்கும்போது, தேவையான அளவு நாட்டுச் சர்க்கரையையோ அல்லது வெள்ளை சர்க்கரையையோ சேர்த்து கலந்து கொள்ளலாம்.

vendha kelveragu

இதோடு ஏலக்காய் பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து கிளறி விடுங்கள். இறுதியாக இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரி, உலர் திராட்சை தாளித்து, புட்டில் சேர்த்து, கிளறி விட்டால், வாசத்தோடு சத்தான ராகி புட்டு தயாராகிவிடும். வாரத்தில் ஒரு நாள், உங்கள் குழந்தைகளுக்கு இந்தப் புட்டை செய்து கொடுத்தால் கூட, உடலுக்கு அதிகப்படியான சத்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த குறிப்பு படித்திருந்தால் சுலபமான முறையில் உங்கள் வீட்டிலும் ஒரு முறை ராகி புட்டு செய்து பாருங்கள்!