ரொம்ப ரொம்ப சுவையான ‘தாளிச்ச டம்ளர் இட்லி’ 15 நிமிடத்தில் நம் வீட்டிலும் இப்படி செய்து பார்க்கலாமே!

tamblar-idli3
- Advertisement -

பாரம்பரிய முறையில் இட்லி செய்து வைத்தாலும் தினமும் இதே இட்லியா? என்று புலம்புவதும் உண்டு. சதா இட்லி செய்து கொடுத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு இட்லி மீது ஒரு வெறுப்பு வந்து விடுகிறது. உங்கள் இட்லி பஞ்சு போல இருந்தாலும் ஒரே மாதிரியான முறையில் செய்யும் பொழுது கண்டிப்பாக அலுப்பு தட்ட வாய்ப்புகள் உண்டு. இட்லியை விதவிதமான முறைகளில் செய்து கொடுத்து பாருங்கள், தினமும் இட்லி சுட்டாலும் ஒரு இட்லியை கூட வீணாக்க மாட்டாங்க! அதுவும் இந்த தாளிச்ச டம்ளர் இட்லிக்கு மவுசு அதிகம்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்! அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

tamblar-idli

‘தாளிச்ச டம்ளர் இட்லி’ செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – அரை கிலோ
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்

- Advertisement -

மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
வர மிளகாய் – நான்கு
வேர்க்கடலை – அரை கப்

idly-maavu

நறுக்கிய தேங்காய் – அரை கப்
கறிவேப்பிலை – ரெண்டு கொத்து
எண்ணெய் – தேவையான அளவிற்கு

- Advertisement -

‘தாளிச்ச டம்ளர் இட்லி’ செய்முறை விளக்கம்:
‘இட்லி’ தெரியும்! அதென்னங்க ‘தாளிச்ச டம்ளர் இட்லி’? என்று ரொம்பவும் யோசிக்க தேவையில்லை. இட்லி மாவுடன் தாளித்துக் கொட்டி டம்ளரில் அவித்து எடுத்தால் தாளிச்ச டம்ளர் இட்லி தயாராகிவிடும். சரி அதை எப்படி செய்யலாம்? என்று இனி பார்ப்போம். முதலில் மேற்கூறிய பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வேர்க்கடலையை லேசாக கடாயில் வறுத்து தோலுரித்து வைத்துக் கொள்ளலாம். அல்லது தோலுடன் அப்படியே சேர்த்தாலும் உங்கள் விருப்பம் தான்.

tamblar-idli2

அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் அதில் தலா ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக சிவக்க வறுக்க வேண்டும். பருப்பு வகைகள் வறுபட்டதும், மிளகு, சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள்.

மிளகு, சீரகம் பொரிந்து வந்ததும் நான்கு வர மிளகாய்களை கில்லி தாளிக்கவும், பின்னர் வேர்க்கடலை சேர்த்து வதக்க வேண்டும். பின் நறுக்கிய தேங்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மீண்டும் நன்கு வதக்க வேண்டும். தேங்காய் மற்றும் வேர்க்கடலைகள் நன்கு வெந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து ஆற விடுங்கள். பின்னர் இட்லி மாவுடன் தாளித்த இந்த பொருட்களை அப்படியே சேர்த்து நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள்.

tamblar-idli4

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களிடம் இருக்கும் டம்ளர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கலந்து வைத்துள்ள இந்த மாவை ஊற்றி தண்ணீருக்குள் வையுங்கள். டம்ளர் மூழ்கி விடக்கூடாது என்பதில் கவனம் தேவை. சாதாரணமாக இட்லி அவிக்க பத்து நிமிடமே போதும், ஆனால் இப்படி டம்ளர்களில் நாம் ஊற்றி வைக்கும் பொழுது கூடுதலாக 5 நிமிடம் வைக்கலாம். எனவே 15 நிமிடத்திற்கு அப்படியே ஆவியில் வேகவிடுங்கள். பின்னர் எடுத்து டம்ளரை பச்சை தண்ணீரில் காண்பித்து தட்டினால் ‘தாளிச்ச டம்ளர் இட்லி’ அழகாக வந்து விழும். அதனுடன் காரச் சட்னி, தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். இப்படி வித்தியாசமான முறைகளில் நாம் செய்து கொடுக்கும் பொழுது வீட்டில் இருக்கும் அனைவருமே புதுமையை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்து பயனடையலாமே!

- Advertisement -