பிறவி இல்லா மோட்சம் வேண்டுமா ? தமிழ்நாட்டில் இங்கு செல்லுங்கள்

Kovil Gopuram

திருவாரூரில் பிறந்த எவருக்கும் மறுபிறப்பு என்பதே கிடையாது என்பதும், இறுதி காலத்துக்கு பின்னர் திருக்கயிலையை அடைந்து சிவன் சேவடியைத் தொழுவர் என்பதும் ஐதீகம். அதனால்தான், ‘பிறக்க முக்தி தரும் தலமிது’ என்று திருவாரூர் போற்றப்படுகிறது.

Thiruvarur Temple

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் தேவர்களுக்கு உதவிய முசுகுந்த சக்கரவர்த்தி, ‘எனக்குப் பரிசாக சோமாஸ்கந்த மூர்த்தியை வழங்கினால், பெரிதும் மகிழ்வேன்’ என்று கூறினார். திருமால் வணங்கிய சோமாஸ்கந்தமூர்த்தியைத் தர விருப்பமில்லாத இந்திரன், மூல சிலையைப்போலவே ஆறு சிலைகளை உருவாக்கி, மூல சிலையை எடுத்துக்கொள்ளச் சொன்னார்

முசுகுந்தர், மூல சிலையைக் கண்டுபிடித்து, கூடுதலாக ஆறு சிலைகளையும் சேர்த்து பரிசாகப் பெற்றார். அவை திருநள்ளாறு, திருநாகைக்காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு தலங்களில் வைக்கப்பட்டன. திருவாரூர் கோயில் ‘பூங்கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.

கருவறை, ‘திருமூலட்டானம்’ என்று அழைக்கப்படுகிறது. மூலவர், ‘வன்மீகநாதர்’ என வணங்கப்படுகிறார். மூலவரைவிட, இங்கு தியாகேசப்பெருமானே சிறப்பாக வணங்கப்படுகிறார். இவருக்கு எதிரே நின்ற நிலையில் நந்தியெம்பெருமான் இருக்கிறார். இது மிக விசேஷமான அமைப்பு.

Thiruvarur Temple

- Advertisement -

திருவாரூர் தியாகேசருக்கு, `வீதிவிடங்கன்’, `தியாக விநோதர்’, `செவ்வந்தி தோட்டழகர்’, `செங்கழுநீர் தாமர்’, `அஜபா நடேசர்’ உள்ளிட்ட 108 திருப்பெயர்கள் உள்ளன. இவரை சிறப்பாக தரிசிக்க, சாயரட்சை பூஜைதான் சிறந்தது. திருமூலட்டானம், திரு ஆரூர் அரநெறி, ஆரூர் பரவையுள் மண்டலி என மூன்று பாடல் பெற்ற தலங்களைக் கொண்ட ஊர் திருவாரூர்.

முதல் இரண்டு தலங்களும் திருவாரூர் கோயிலின் உள்ளேயே அமைந்து உள்ளன. பரவையுள் மண்டலி திருக்கோயில் தேரடி அருகே உள்ளது. இந்த ஊரின் பிரமாண்ட கமலாலய திருக்குளம் ஐந்து வேலி பரப்பளவு கொண்டது.

Thiruvarur Temple

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்று சிறப்பாக சொல்லப்படுகிறது. சிதம்பரத்தைவிட திருவாரூர் காலத்தால் முந்தையது என்பதால், எல்லாக் கோயில்களிலும் தேவாரத் திருப்பதிகங்கள் பாடி முடித்ததும், ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்லி நிறைவு செய்யும் வழக்கம், திருவாரூரில் மட்டும் இல்லை.

மனுநீதிச் சோழன் ஆட்சி செய்த ஊர் திருவாரூர். கன்றினை இழந்த பசுவின் துன்பம் போக்க, தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொல்லத் துணிந்த மனுநீதிச் சோழன், திருவாரூரைத் தலைநகராகக் கொண்டே ஆட்சிசெய்தார்.

Thiruvarur Temple

சுந்தரரின் தாயார் இசைஞானியார், சுந்தரர், விறன்மிண்ட நாயனார், நமிநந்தி அடிகள், தண்டியடிகள், சேரமான் பெருமான் நாயனார், செருத்துணை நாயனார், கழற்சிங்க நாயனார் என பல நாயன்மார்களோடு தொடர்பு கொண்ட திருத்தலமிது.

நமிநந்தி அடிகள் நீரால் விளக்கேற்றிய தலமிது. சுந்தரர், பரவை நாச்சியாரை மணந்துகொண்ட தலமிது. சுந்தரருக்காக ஈசனே பரவை நாச்சியாரிடம் நடந்து சென்று தூது போன விந்தையும் இந்த ஊரில்தான் நடந்தது. திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணந்துகொண்டு, ‘இனி பிரிய மாட்டேன்’ என்று சுந்தரர் வாக்களித்தார். பிறகு கொடுத்த வாக்கை மீறி, திருவொற்றியூரைவிட்டுக் கிளம்பியதால், கண்ணை இழந்தார். பிறகு, இழந்த வலது கண் பார்வையை திருவாரூரில்தான் பெற்றார்.

Thiruvarur Temple

`பஞ்சமுக வாத்தியம்’ எனப்படும் ஐம்முக முழவம், சுத்த மத்தளம், பாரி நாதஸ்வரம் போன்ற அபூர்வ இசைக்கருவிகள் இந்தக் கோயிலில் உள்ளன. நாட்டியத்தையும், இசையையும் வளர்த்த சிறப்பான கோயில் இது. சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீக்ஷிதர் ஆகிய மூவரும் வாழ்ந்து பாடிய புண்ணியத் தலமிது என்றும் திருவாரூர் போற்றப்படுகிறது.

Thiruvarur Temple

திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சிபுரம் மதிலழகு என்று கூறுவதைப்போல திருவாரூரில் தேர் அழகு மட்டுமல்ல, பிரமாண்டமானதும் கூட.

இதையும் படிக்கலாமே:
விளக்கேற்ற காசில்லாததால் தன் ரத்தம் கொண்டு விளக்கேற்றிய சிவ பக்தன் – உண்மை சம்பவம்

ஆரூரில் பிறவாத பேர்களும் முக்தி அடைய விரும்பினால், திருவாரூர் சென்று தியாகேசப் பெருமானை அவசியம் தரிசித்து வணங்க வேண்டும். கலை, கலாசாரத்தின் பெட்டகமாக விளங்கும் இந்த திருவாரூர், தமிழகத்தின் பொக்கிஷமாகவும் விளங்கிவருகிறது.