இந்த வார ராசிபலன் – ஏப்ரல் 20 முதல் 26 வரை

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் அமையப்போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. வருமானத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்சினைகள் வந்துபோகும். விட்டுக்கொடுத்தால் சண்டைகள் பெரிதாகாமல் தப்பித்துக்கொள்ளலாம். வியாபாரம் மந்தமான சூழ்நிலையில் செல்லும். அதிகமான உழைப்பை முதலீடு செய்தால் மட்டுமே நல்ல லாபம் உண்டு. வீட்டிலிருந்தே வேலை செய்யும் அலுவலகப் பணி எப்பவும் போல் செல்லும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். தினம்தோறும் 11முறையாவது ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரிப்பது நல்லது.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் பிறக்கப் போகின்றது. வீட்டில் உறவினர்களின் எதிர்பாராத வருகையால், சில பிரச்சினைகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. தேவையற்ற பிரச்சனைகள் குடும்பத்தில் அவ்வப்போது வந்தாலும், பொறுமையோடு பிரச்சினையை கையாள வேண்டும். அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விடக்கூடாது. பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயம் உண்டாகும். உங்கள் பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டு நிச்சயம் உண்டு. மாணவர்கள் கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தினம் தோறும் சிவபெருமானை நினைத்து 5 நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்தி தரக்கூடிய வாரமாக தான் பிறக்கப் போகின்றது. செலவுகளை சமாளித்து விடுவீர்கள். இதனால் வரை இருந்த உடல்நலக் கோளாறுகள் இந்த வாரம் சரியாகிவிடும். தந்தையிடம் பேசும் போது சற்று கவனமாக பேசுவது நல்லது. வாக்குவாதத்தை குறைத்துக் கொள்ளவும். பொறுமை அவசியம் தேவை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். சற்று அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படும். வியாபாரம் லாபத்தோடு இயங்கும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்கள், சக ஊழியர்களிடம் தொலைபேசியில் பேசும்போது சற்று உஷாராக இருக்க வேண்டியது அவசியம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தினந்தோறும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. பொருளாதார சூழ்நிலை மேலோங்கி இருக்கும். அதிகப்படியான வருமானம் மகிழ்ச்சியை தரப்போகிறது. புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சொந்தத் தொழிலில் புதிய முயற்சியில் ஈடுபடலாம். அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக அமையப்போகிறது. கடனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு கடன் தொகை விரைவில் கிடைத்துவிடும். பிள்ளைகளால் மன நிறைவு ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வீட்டிலிருந்தபடியே உங்களுக்கு தெரிந்த ஒரு மந்திரத்தை மனதார உச்சரித்து வந்தால் மனநிம்மதி கிடைக்கும். எடுத்துக்காட்டாக ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை கூட சொல்லலாம்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. பொருளாதார ரீதியாக எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதை சமாளித்து விடுவீர்கள். நிதி நிலைமை உங்களுக்கு கை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளதால், அநாவசிய பேச்சை தவிர்த்து, அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் சற்று மந்தமாக தான் செல்லும். நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப வியாபார சூழ்நிலையை மாறுவது சகஜம்தான். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளில் ஈடுபடுவது அவ்வளவு நல்லதல்ல. எல்லா விஷயங்களிலும் சற்று உஷாராக நடந்துகொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டிலிருந்தே சிவபெருமானை நினைத்து கண்களை மூடி 5 நிமிடம் தியானம் செய்வது மிகவும் நல்லது.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதி தரக்கூடிய வாரமாக தான் பிறக்கப் போகிறது. வருமானத்தில் தாமதம் ஏற்பட்டாலும், செலவுகளை எப்படியாவது சமாளித்து விடக் கூடியது தைரியம் உங்களுக்கு வந்துவிடும். உறவினர்களிடம் பேசும் போது மட்டும் வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். வீட்டில் ஒற்றுமை நிலவும். மன அமைதி ஏற்படும். திருமணப் பேச்சை தாராளமாகத் தொடங்கலாம். உங்களின் தாயாரின் உடல்நலனில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வியாபாரத்தை எப்பவும் போல் செயல்படுத்தவேண்டும். புதிய முதலீடுகள் இந்த வாரம் செய்வதாக இருந்தால் கவனத்தோடு செய்வது நல்லது. அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். தினம் தோறும் குரு பகவானை நினைத்து மனதார வீட்டிலிருந்து வழிபடுவது நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய வாரமாக தான் இந்த வாரம் பிறக்கப் போகிறது. உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைபாடு தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகி விடவும். வருமானம் வழக்கத்தை விட இரு மடங்காக பெருகும். எதிர்பாராத செலவு ஏற்பட்டாலும் அது சுப செலவாகத்தான் இருக்கும். உங்களது குடும்ப விஷயங்களை அவசியமாக அக்கம்பக்கத்தினர் இடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வீட்டில் இதுநாள்வரை நடக்காத சுபகாரியம் ஒரு நல்ல முடிவுக்கு வரும். கட்டாயம் அந்த சுப காரியத்தை கூடிய விரைவில் நடத்தி முடிப்பீர்கள். உங்களது தாயாரின் உடல் நலனை அக்கறையோடு கவனித்துக் கொள்ளுங்கள். அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவர்கள் மட்டும் வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வீட்டில் இருந்தே அலுவலகப் பணியில் ஈடுபடுபவர்கள் சக ஊழியர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதும் உஷாராக பேச வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தினம்தோறும் வீட்டிலேயே தீபம் ஏற்றிவைத்து விநாயகப் பெருமானை மனதார வழிபடுவது மிகவும் நல்லது.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. வீட்டில் சுபகாரியப் பேச்சுகளை தொடங்கலாம். உங்களது வாழ்க்கைத் துணை உங்களுக்கு  உறுதுணையாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணையின் அருமை பெருமைகளை நீங்கள் புரிந்து கொள்ளும் நேரம் இது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. அலுவலகப் பணியை வீட்டிலிருந்து செய்பவர்கள் ஆர்வத்தோடு தங்களது பணிகளை செய்து முடிப்பார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து படிக்க வேண்டியது அவசியம். வீட்டிலிருந்தே தீபம் ஏற்றிவைத்து அனுமனை மனதார நினைத்து வேண்டிக் கொள்வது மனதைரியத்தை அதிகப்படுத்தும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக தான் பிறக்கப் போகின்றது. இந்த வாரத்திற்கு தேவையான பண இருப்பு உங்கள் கையில் இருப்பதால் சந்தோசமாக செலவு செய்வீர்கள். அடுத்த மாதத்திற்கும் பணம் தேவை உள்ளது என்பதை மனதில் நினைவில் வைத்துக்கொண்டு சிக்கனமாக செலவு செய்ய பாருங்கள். உடல் ஆரோக்கியம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குடும்ப விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். எந்த காரியத்தில் காலெடுத்து வைத்தாலும் பொறுமை மிகமிக தேவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  வியாபாரம் சற்று மந்தமாகத்தான் செல்லும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு அவ்வப்போது சில பிரச்சினைகள் வந்துபோகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தினம்தோறும் அம்பாளை நினைத்து வீட்டிலிருந்தே தீபமேற்றி வழிபடுவது மன அமைதியை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. உங்களது பிள்ளைகளினால் மனநிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீண்ட நாட்களாக கொடுக்க முடியாமல் இருந்த கடனை, இந்த வாரம் அடைக்க முயற்சி செய்வீர்கள். சற்று வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனைத்து செயல்பாடுகளிலும் கவனம் தேவை. வியாபாரம் மந்தமாக இருந்தாலும், அவசரப்பட்டு எந்த ஒரு முதலீட்டையும் இந்த வாரம் செய்துவிட வேண்டாம். பொறுமை காக்க வேண்டும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு நல்ல பாராட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வீட்டிலிருந்தே தீபம் ஏற்றி வைத்து பெருமாளை மனதார சேவிப்பது நல்லது.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு திருப்தி தரக்கூடிய வாரமாக தான் இந்த வாரம் பிறக்கப் போகின்றது. பணவரவு சீராக இருக்கும். இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினை, இந்த வாரம் ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிடும். தந்தையிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் உடனுக்குடன் ஒரு முடிவுக்கு வந்துவிடும். வியாபாரதிற்காக சில பேர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அந்த சமயங்களில் உங்களது உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். உஷாராக பயணத்தில் ஈடுபட வேண்டியது மிக அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகப் பணியை வீட்டிலிருந்து செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வீட்டிலிருந்தே தீபமேற்றி வைத்து இறைவனை மனதார வேண்டிக் கொள்வது மனதிற்கு நிம்மதியை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. கணவன் மனைவி பிரச்சனைக்கு இந்தவாரம் ஒரு தீர்வு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளால் மன அமைதி நிலவும். சொந்த தொழிலில் இருந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும், அதை சமாளித்து விடுவீர்கள். கோபத்தை மட்டும் சற்று குறைத்துக் கொள்ள வேண்டும். கோபத்தோடு நீங்கள் பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் திரும்பவும் உங்களையே பாதிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். தினம்தோறும் கண்களைமூடி சிவபெருமானை நினைத்து 5 நிமிடம் தியானம் செய்வது மன அமைதியைத் தரும்.