ஐஸ்வர்யங்கள் தரும் வரலட்சுமி விரதம்!

Varalaxmi-Vratham-in-Kalyana-Mandapam-3

இன்று வரலட்சுமி விரதமாகும். ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை அன்று, வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படும்.

வரலட்சுமி விரதம் என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்து பெண்களிலால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னிப் பெண்களால் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

சுமங்கலிப் பெண்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டியும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.

 

கன்னிப் பெண்கள் தமது திருமணத்தடை நீங்கி திருமணம் நல்லப்படியாக நடக்க வேண்டும் என்று லட்சுமியை நோக்கி வரலட்சுமி விரதமிருப்பார்கள்.

- Advertisement -

இந்நாளில் வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி இல்லத்தை வரலட்சுமி கலசம் ஒன்றில் லட்சுமியை வணங்கித் தொடங்குவர்.

கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு என்பவற்றை இட்டு கலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து, தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன லட்சுமியின் உருவச்சிலையை அல்லது படத்தை கலசத்திலுள்ள தேங்காயில் வைப்பர்.

மஞ்சள் சரட்டை குங்குமத்தில் வைத்துக் கலசத்தில் அணிந்து வரலட்சுமியைக் கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவர். அன்று முழுவதும் அஷ்டலட்சுமி தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வர்.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீர லட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என எட்டு அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர்.

லட்சுமிதேவி எட்டுவகை செல்வங்களை வாரி வழங்குபவள் என்றும் நினைத்து பெண்கள் அந்நாளில் உபவாசம் இருந்து இவ்விரதத்தினை மேற்கொள்வார்.

இவ்விரத்திற்கு என்று புராணக்கமையொன்று உள்ளது. முன் காலத்தில் சாருமதி என்ற பெண், தன் கணவனையும், மாமனார், மாமியாரையும் கடவுளர்களாகவே நினைத்து பணிவிடை களைச் செய்து வந்தாள். அவளின் அன்பு மிகுந்த மனதைக் கண்டு, மகாலட்சுமி தேவி மகிழ்ச்சி கொண்டாள்.

ஒரு நாள் சாருமதியின் கனவில் தோன்றிய லட்சுமிதேவி, ‘என்னைத் துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்’ என்று கூறியதுடன், அந்த விரதத்தை கடைப் பிடிக்கும் வழிமுறைகளையும் சாருமதிக்கு எடுத்துரைத்தார். அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் சிறப்பு மிகுந்த பணியையும் அவளிடம் லட்சுமிதேவி ஒப்படைத்தாள்.

சாருமதியும், தேவியின் எண்ணப்படியே அனைத்தையும் செய்து முடித்தாள். சாருமதி ‘வரலட்சுமி விரதம்’ இருந்து பல நன்மை களைப் பெற்றாள். அதைக் கண்ட மற்ற பெண்களும் அந்த விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினர். அதன் காரணமாக அந்த நாடே சுபீட்சம் அடைந்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

நாமும் இவ்விரத்தை அனுட்டித்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.