வெள்ளாடை சித்தர் ஜீவ சமாதி குறித்த விவரங்கள்

siddhar

சித்தர்கள் பலர் தாங்கள் இந்த பூமியில் வாழும் காலத்தை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப தங்களது ஜீவ சமாதி குறித்த தகவல்களை தங்களது சிஷ்யர்களிடம் முன்கூட்டியே கூறிவிட்டு, தியானநிலையில் மூச்சை நிறுத்துவது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அது போன்ற சம்பவம் ஒன்று சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அப்புபிள்ளையூர் என்ற ஊரில் வாழ்ந்தவர் தான் வெள்ளாடை சித்தர். இவர் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டியுள்ளார். அதோடு இவர் அகத்தியர், போகர் போன்ற மிகப்பெரிய சித்தர்களிடம் அருளாசி பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் அப்புபிள்ளையூரில் தான். இவர் பல அபூர்வ மூலிகைகளை கொண்டு அங்கு வாழ்ந்த மக்களின் நோய்களை குணப்படுத்தியுள்ளார். அதோடு 108 மூலிகைகளை கொண்டு இவர் தன் உடலை காயகல்பம் ஆகியுள்ளார். பழனி மலையில் ஆறு மாத காலம் தவமிருந்து போகரை தரிசித்த இவர், பொதிகை மலையில் தவம் இருந்து அகதியரையும் கண்டுள்ளார்.

பழனிமலையில் இவருக்கு ஆசி வழங்கிய போகர் காற்று வேகத்தில் சென்றதாகவும், அவரை பின் தொடர்ந்த வெள்ளாடை சித்தர் மீண்டும் அவரிடம் சென்று ஆசி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதோடு அகத்தியரை தரிசிக்க போகர் ஒரு பாடலை கூறியதாகவும் அந்த பாடலை பாடியவாறு பொதிகை மலை சென்று அகத்தியரை தரிசிக்கும்படியும் கூறியுள்ளார்.

ஒரு சமயம் வெள்ளாடை சித்தருக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டதால் அவருக்கு எக்சரே எடுக்கப்பட்டுள்ளது. அந்த எக்சரேவில் அவரில் உடலினுள் ஒரு தீபம் எரியும் காட்சி தெரிவதை கண்டு பலரும் ஆச்சர்யப்பட்டுள்ளனர். அந்த எக்சரே இப்பொழுதும் அவர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ளது. இப்படி பல அதிசயங்களை நிகழ்த்திய இவர் தனது 108 வயதில் ஜீவ சமாதி அடைந்துள்ளார்.