விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வியாபாரிகளுக்கு பதிலடி கொடுத்த வேப்பங்குள கிராம மக்கள்.

veppangulam5

விவசாயம் என்று சொன்னாலே நஷ்டமாகி விடுமென்று பயந்து, விவசாயிகள் தங்களுடைய விலைநிலங்களை எல்லாம் முடிந்தவரை, நல்ல விலை கிடைத்தால் போதும் என்று விற்க முடிவு செய்கிறார்கள். பாவம், இதில் விவசாயிகளின் தவறு எதுவுமில்லை. கஷ்டப்பட்டு விளைவிக்கப்படும் பொருட்கள் அனைத்தும், அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு, அதிகப்படியான விலைக்கு விற்கப்படுகிறது. இதில் விளைவித்தவர்களுக்கு லாபம் என்பதே இருக்காது. ஆனால் கொள்முதல் செய்து விற்கும் வியாபாரிகள் அதிக லாபத்தை அடைகிறார்கள். இதனால் விவசாயிகள் எல்லாம் தங்களது விவசாயத்தை விட்டு வரும் இந்த காலகட்டத்தில், சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வேப்பங்குளம் கிராமத்தில் விவசாயிகள் எடுத்திருக்கும் இந்த கூட்டு முயற்சியை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

farmers

வேப்பங்குள கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து விவசாயம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இங்கு பெய்த பருவ மழையின் காரணமாக இந்த கிராமத்தில் இருக்கும் நீர்நிலைகள் எல்லாம் நிரம்பி இருப்பதால், இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாகவே இருந்தது. ஆனால் விளைச்சல் அதிகமாகி என்ன செய்வது? அதற்கான லாபத்தை விவசாயிகள் பெற போகிறார்களா? வழக்கம் போல இங்கு விளைந்த நெல்லை வெளி வியாபாரிகள் 66 கிலோ இருக்கும் ஒரு மூட்டையை வெறும் 850/- ரூபாய்க்கு கொள்முதல் செய்து வருகிறார்கள்.

விவசாயிகள் லாபம் பார்ப்பதைவிட இடைத்தரகர்களும், வியாபாரிகளும் தான் அதிக லாபத்தை எடுக்கிறார்கள். இதை உணர்ந்த வேப்பங்குள கிராம மக்கள், தங்களது நெல் மூட்டைகளை அடிமாட்டு விலைக்கு விற்கக்கூடாது என்று முடிவுசெய்தனர். இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை,  தங்களுக்குள்ளேயே பண தேவையுள்ள விவசாயிகளுக்கு மட்டும் மூட்டைக்கு ரூ.1,100 என்ற விலையை நிர்ணயித்து நெல்லை விற்பனை செய்து, அந்த நெல்லை அரிசியாக மாற்றி அந்த அரிசிக்கு ‘வேப்பங்குளம் பிராண்ட்’ என்ற பெயரை போட்டு விற்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள்.

veppangulam1

அதாவது விவசாயிகள் விளைவித்த நெல்லை, விவசாயிகளே கொள்முதல் செய்து அரிசியாக மாற்றி விற்பனை செய்ய முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் தங்களது கையில் இருக்கும் முதலீடுகளை எல்லாம் விவசாயத்தில் போட்ட இவர்களுக்கு நெல்லை கொள்முதல் செய்ய பணம் எப்படி கிடைக்கும்?

- Advertisement -

நெல் கொள்முதல் செய்வதற்கான பணத்தை பெறுவதற்காக விவசாயிகள் தங்களது கிராம மக்கள் சார்பில் சமூக வலைத்தளங்களில் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அது என்னவென்றால் ‘அரிசி தேவைப்படுவோர் முன்கூட்டியே பணம் செலுத்தினால் குறைந்த விலையில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி வினியோகிக்கப்படும்’. குறைந்த விலையில் அரிசியை வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட முன் பணத்தின் மூலம் விவசாயிகள் 300 மூட்டை நெல்லை கொள்முதல் செய்து, தற்போது அந்த நெல்லை அரிசியாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

veppangulam3

இந்த கிராம மக்களின் முயற்சியை பாராட்டிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெகநாதன் அவர்கள் வேப்பங்குளத்தில் ஒரு நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பல கிராமங்களிலிருந்து ஒரு நாளைக்கு 40 விவசாயிகள் வரை வந்து செல்கின்றனர்.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை, மற்றொரு விவசாயிக்கு விற்பனை செய்து, அந்த நெல்லை விவசாயிகளே அரிசியாக மாற்றி விற்பனை செய்தால் அரிசியின் விலை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். மற்ற விவசாயிகளுக்கு இந்த வேப்பங்குள மக்கள் ஒரு நல்ல முன் உதாரணமாக இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

veppangulam4

இதுமட்டுமல்லாமல் வேப்பம் குளத்திற்கு நெல்லை கொள்முதல் செய்வதற்காக வரும் விவசாயிகளுக்கும், அந்த நெல்லை எடைபோட்டு மூட்டையாக கட்டி விற்பனைக்கு தயார் செய்யும் பணியாளர்களுக்கும், கிராம மக்களின் சார்பில் இலவசமாக நார்த்தம் பழம் ஜூஸ் கொடுத்து உபசாரம் செய்கிறார்கள்.

மற்ற கிராமங்களிலிருந்து வரும் விவசாயிகளுக்கு உணவாக பாரம்பரியமான கலத்து தோசை செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதை வழக்கமாகவும் வைத்துள்ளார்கள்.  இதனால் இங்கு வரும் விவசாயிகள் மகிழ்ச்சியோடு நெல்லை கொள்முதல் செய்து கொண்டு செல்கிறார்கள். ஒரு விவசாயிக்கு, மற்றொரு விவசாயி கை கொடுத்து தூக்கி விட்டாலே போதும். விவசாயம் அழிவதை தடுத்துவிடலாம் என்பதற்கு உதாரணமும் இந்த ஊர் மக்கள் தான்.

English Overview:
Here we have Veppankulam village. Veppankulam kallal. Kallal group. Sivagangai agriculture department.