புத்தாண்டன்று என்னவெல்லாம் செய்தால் வருடம் முழுதும் நன்மை உண்டாகும்?

New year

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு பிறந்து கொண்டே தான் இருக்கிறது. நாமும் இந்நாளில் இருந்து இதை செய்வேன்! அதை செய்வேன்! என்று எதையாவது கூறிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆண்டு இறுதியில் அதையெல்லாம் செய்தோமா? என்று பார்த்தால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறுவோம். இந்த பரபரப்பான நவீன யுகத்தில் அவற்றையெல்லாம் கடைபிடிப்பது அசாத்தியமான ஒன்றாகவே போய்விட்டது. பலபேருக்கு இந்த நாளில் என்னவெல்லாம் புதிதாக செய்யலாம்? எதை செய்தால் வருடம் முழுவதும் மனநிறைவுடன் இருக்கலாம் என்று தெரிவதில்லை. அதை யோசிப்பதற்கு கூட அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. இந்த புத்தாண்டு தினத்தில் நீங்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான 11 விஷயங்கள் என்ன என்பதை இப்பதிவில் நாம் காணலாம்.

 friendship

1. நட்பு வட்டம் விரிவடைய செய்வது:
இந்த இனிய நாளிலிருந்து முதலில் நீங்கள் பின்பற்ற வேண்டியது உங்களின் நட்பு வட்டத்தை மேலும் மேலும் விரிவடைய செய்வது. அது நண்பர்களாகவோ அல்லது உறவினர்களாகவோ இருக்கலாம். அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள். அக்கறையோடு பழகுங்கள். உங்களிடம் நேரம் இல்லை என்றாலும் உங்களை சார்ந்தவர்களுக்காக ஒரு பத்து நிமிடத்தையாவது ஒதுக்கி நலம் விசாரியுங்கள். அது அவர்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். அப்படி நீங்கள் செய்வதினால் ஏற்படும் பலன் என்னவென்று உங்களுக்கே தெரியும். அந்த அன்பு பன்மடங்காக பெருகி உங்களிடமே திரும்ப வரும். உங்களின் எதிர்கால லட்சியங்களை முக்கிய நபர்களிடம் அறிவித்துக் கொண்டே இருங்கள். உங்களுக்குள்ளே வைப்பதன் மூலம் எந்த பலனும் இல்லை. பலருக்கு தெரிவதால் உங்களின் அறிவாற்றல் மென்மேலும் வளர்ந்து கொண்டே போகும்.

2. உடல் ஆரோக்கியம்:
இன்றைய பரபரப்பான உலகில் யாரும் தம்முடைய உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படுவதே கிடையாது என்றே கூறலாம். உழைத்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது. நம்முடைய உடல் ஆரோக்கியமும் அவசியமான ஒன்று தான். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உங்களால் எதிர்கால உழைப்பை கொடுக்க முடியும். வருடம் ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சென்ற வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் நம் உடலில் உள்ள மாற்றங்களை தெரிந்து வைத்துக்கொள்வது உங்கள் எதிர்காலத்திற்கு சிறந்தது.

trip

3. வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது:
நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் நமக்கு என்னடா இது வாழ்க்கை? என்கிற விரக்தி மனப்பான்மை உண்டாகி விடுகிறது. வருடம் ஒருமுறையேனும் நீங்கள் விரும்பிய இடத்திற்கு திட்டமிட்டு பயணம் மேற்கொள்ளலாம். குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ சென்று வரலாம். இவ்வாறு செய்வதால் அந்த வருடம் முழுவதும் உங்களுக்கு ஒரு மன நிறைவு உண்டாகும்.

- Advertisement -

4. தேவையற்ற பொருட்களை நீக்குவது:
உங்கள் வீட்டில் நீங்கள் உபயோகப்படுத்தாத, தேவையில்லாத, உங்களுக்கு பயன்படாத பொருட்களை அப்புறப்படுத்தலாம் அல்லது யாருக்காவது பயன்படும் படி கொடுத்து விடலாம். இதனால் வீடு சுத்தமாகும். பார்ப்பதற்கு அழகாகவும் காட்சியளிக்கும்.

calendar

5. நாட்குறிப்புகள்:
இன்றைய நாளில் நீங்கள் வருடம் முழுவதும் உள்ள முக்கிய நாட்களை குறித்துக் கொள்ளலாம். உங்களது மொபைல் போனில் அலாரம் செட் செய்து ரிமைண்ட் பண்ணிக் கொள்ளலாம். உதாரணமாக வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக பிறந்தநாள், திருமண நாள் திகதிகள் குறித்து வைக்கலாம். பணியாளர்களுக்கு சம்பளம் தருவதற்காக நாட்களை குறிப்பெடுத்து கொள்வதனால் கடைசி நிமிட டென்ஷன் உங்களுக்கு இருக்காது. குறித்த நேரத்தில் கொடுக்கப்படும் வாழ்த்தும், சம்பளமும் உங்களின் மதிப்பை உயர்த்தும்.

6. டைரி எழுதுவது:
பலரிடம் டைரி எழுதும் பழக்கம் இருப்பது கிடையாது. இந்த நவீன யுகத்தில் வெகுசிலரே அந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். அதுபோல நாமும் நாளை முதல் அன்றாட நிகழ்வுகளை அல்லது நமக்கு பிடித்ததை, தோன்றுவதை, பிடித்தவர்களை பற்றி நாம் எழுதி வைத்துக் கொள்ளலாம். வருட இறுதியில் அதை படிக்கும் பொழுது நாம் கடந்து வந்த ஒவ்வொரு நினைவுகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவது போல் இருக்கும். அதன் அற்புதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

pendrive

7. தகவல் சேமிப்பு:
உங்களின் மொபைல் போன், லேப்டாப், பென்டிரைவ் முதலியவற்றில் நீங்கள் சேமித்த முக்கிய தகவல்களை, கோப்புகளை, காணொளிகளை சரிசெய்து பிரித்து பத்திரப்படுத்தி வைக்கலாம் அல்லது நகல் எடுத்தும் வைத்துக் கொள்ளலாம்.

8. வீட்டை பராமரிப்பது:
உங்கள் வீட்டை பராமரிப்பதில் நீங்களும் பங்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த நாளில் இருந்து தினமும் ஒரு பத்து நிமிடமாவது வீட்டில் உள்ளவர்களுக்கு உதவியாக இருப்பது, தோட்டத்தை பராமரிப்பது, அலமாரிகளை சுத்தம் செய்வது போன்ற சிறு சிறு பணிகளை நீங்கள் செய்யலாம். இதனால் வீட்டிலும் உங்களது மதிப்பு உயரும்.

9. பெரியோர்களுக்கு நேரம் ஒதுக்குவது:
இந்த அவசர யுகத்தில் நாம் பெற்றவர்களையே கவனிக்க நேரம் இல்லாத சூழ்நிலையில் இருக்கிறோம். அதை நினைத்து ஒருபக்கம் வருத்தப்பட்டு கொண்டும் இருக்கிறோம் அல்லவா? இந்த புத்தம் புதிய நாளிலிருந்து நமது பெற்றோருக்கும், தாத்தா பாட்டிக்காகவும் சிறிது நேரத்தை ஒதுக்கலாம். அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும், அனுபவங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் இதனால் அவர்களின் மனம் மகிழும். அவர்களுடைய ஆசீர்வாதமும் நமக்கு கிட்டும்.

cash

10. பணபரிவர்த்தனை:
நீங்கள் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனையை ரொக்கமாக கொடுப்பதை வாடிக்கையாக கொள்ளலாம். நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகம் செய்வதன் மூலம் பணத்தின் மதிப்பை உணர்வதில்லை. ரொக்கமாக கொடுப்பதன் மூலம் உங்களின் உழைப்பு வீணாவது தடுக்கப்படும்.

11. மரம் நடுவது:
இந்த புதிய வருடத்தில் இருந்து நீங்கள் மாதம்தோறும் உங்களால் முடிந்த அளவிற்கு செடிகளை நடலாம். குறைந்தது ஒரு செடியாவது நீங்கள் நடுவதால் ஆண்டு இறுதியில் 12 மரங்களை வளர்த்த பலன் உங்களை வந்து சேரும். வாழ்க்கையில் எதையோ சாதித்த மனநிறைவு உண்டாகும்.

நாளைய புத்தம் புது விடியல் தாமரைபோல் முகமலர்ச்சியுடன் ஆரம்பிக்கட்டும். அந்த இனிய நாள் புதிதாக பிறந்ததாக எண்ணிக்கொள்ளுங்கள். சூரிய காந்தி போல் தம்மை மதிப்பவர்களுக்கு தலை சாய்த்து செல்லுங்கள்… தீயோரிடம் தாமரை இலை போல் ஒட்டி ஓட்டாதிருங்கள். மரத்தின் வேர் எங்கு இருக்கின்றன என்பதை பிறர் காணவில்லை. கோடையில் மலரும் கொடியும் காய்ந்து போகலாம் ஆனால் மண்ணின் உள்ளே புதைந்து இருக்கும் அதன் விதைகள் அழிந்து போவதில்லை, மழைத்துளி கண்டவுடன் பல மடங்காக வெளிவரும் அதுபோல் பிறர் காணாமல் லட்சியம் ஒன்றே மனதில் நம்பிக்கை ஊன்றி புதைத்து வையுங்கள். விருட்சமாய் வளரட்டும் லட்சிய விதை. 2019 ஆம் ஆண்டின் கடைசி நாள் இந்த நாள் இனிய நாளாக மலரட்டும். நாளைய பொழுது இனிய பொழுதாக விடியட்டும். எங்கள் குழுவின் சார்பாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

English Overview:
Here we have New year resolution 2020 in Tamil. New year promise 2020 in Tamil. Puthandu promises 2020 in Tamil. Puthandu resolutions 2020 in Tamil.