- Advertisement -
சமையல் குறிப்புகள்

10 நிமிடத்தில் லன்ச் பாக்ஸ்க்கு சுவையான உருளைக்கிழங்கு சாதம் ரெடி. மதியம் குழம்பு இல்லை என்றாலும் இந்த சாதம் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

லஞ்ச் பாக்ஸில் எடுத்து செல்ல சூப்பரான ஒரு உருளைக்கிழங்கு சாதம் ரெசிபி எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மதியம் குழம்பு இல்லை, வடித்த சாதம் மட்டும் தான் இருக்கிறது என்றாலும் இரண்டு உருளைக்கிழங்கை வைத்து சுட சுட சூப்பரான இந்த சாதத்தை பத்தே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். குழந்தைகள் மிக மிக விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு ரைஸ் ரெசிபியை மிஸ்பண்ணாமல் நீங்களும் தெரிந்து வச்சுக்கோங்க.

முதலில் 1 கப் அளவு உதிரி உதிரியாக வடித்த சாதத்தை ஆற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மதியம் வடித்த சாதத்தில், மிச்சமான சாதம் இருந்தால்கூட அந்த சாதத்தை வீணாக்காமல் சுடச்சுட வெரைட்டி ரைஸாக மாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ள வேண்டும். 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, வரமிளகாய் – 1, இந்த பொருட்களை போட்டு முதலில் தாளித்துவிட வேண்டும். அதன் பின்பு மீடியம் சைஸில் இருக்கும் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக வெட்டி நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறம் வரும் வரை சுருள சுருள வதக்கி விடுங்கள்.

அதன் பின்பு பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு துருவல் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை போட்டு 2 நிமிடம் போல வதக்கி விட்டு, பொடியாக வெட்டிய 2 உருளைக்கிழங்குகளை கடாயில் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்கி விடுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு மேலே ஒரு மூடியைப் போட்டு உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் 1 ஸ்பூன் அளவு தண்ணீரை ஊற்றி உருளைக்கிழங்கு வேக வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

கிழங்கு முக்கால் பாகம் வெந்ததும் 1/2 ஸ்பூன் மிளகாய்தூள், 1/2 குழம்பு மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் வர மல்லித்தூள் சேர்த்து உருளைக்கிழங்கை நன்றாக வதக்கி விடுங்கள். உருளைக்கிழங்கு குழைய குழைய வெந்துவிடக்கூடாது.

உருளைக் கிழங்கு வெந்து வந்தவுடன் வடித்த சாதத்தை கடாயில் போட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி, உதிரி உதிரியாக சாதத்தை கலந்துவிட்டு 3 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டால், சுடசுட சூப்பரான உருளைக்கிழங்கு வெரைட்டி ரைஸ் தயார். வீட்டில் சாப்பிடுவதாக இருந்தால் அப்படியே சாப்பிடலாம். லஞ்ச் பாக்ஸில் பேக் செய்யணும்னா ஆறவைத்து டப்பாவில் போட்டு கொடுத்துடுங்க. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா மிஸ் பண்ணாம உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -