
டீ குடிக்கும்போது சூடாக ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலும் ஈவ்னிங் ஸ்நாக்ஸை கடையில் இருந்து தான் நாம் வாங்கி வருவோம். ஆனால் உங்களுடைய வீட்டிலேயே மிக மிக சுலபமான முறையில், உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு கோதுமை போண்டா எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது நம்முடைய வீட்டில் எப்போதும் செய்யும் கோதுமை போண்டா போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
கோதுமை மாவு – 1 கப், அரிசி மாவு – 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது, சீரகம் – 1 ஸ்பூன், கொறகொறப்பாக இடித்த மிளகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை பொடியாக நறுக்கியது, கொத்தமல்லித் தழை பொடியாக நறுக்கியது தேவையான அளவு. தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் – 2 சிட்டிகை, ஆப்ப சோடா – 1/4 டீஸ்பூன், புளித்த தயிர் – 1/2 கப் இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து முதலில் நன்றாக கலந்துவிட வேண்டும். கட்டிகள் விழக்கூடாது.
அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் இந்த மாவு கெட்டியாக இருக்கக் கூடாது. இப்போது நமக்கு போண்டா சுடுவதற்கு தேவையான மாவு தயார்.
இந்த போண்டாவை கையில் எடுத்து எண்ணெயில் நம்மால் விட முடியாது. அப்பம் சுடுவது போல ஒரு குழிக் கரண்டியில் இந்த போண்டா மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி பொரித்து எடுக்க வேண்டியதுதான்.
அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். முதலில் கரைத்து வைத்திருக்கும் மாவில் ஒரு சிறிய குழி கரண்டி அளவு மாவை எடுத்து எண்ணெயில் ஊற்ற வேண்டும். அந்த போண்டா எழும்பி மேலே வந்தவுடன், அடுத்தடுத்து இன்னொரு போண்டாவை எண்ணெயில் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெயில் ஊற்றிய போண்டா அனைத்தும் சிடசிடப்பு அடங்கி, சிவந்து வந்தவுடன் எண்ணெயை வடித்து எடுத்து சுட சுட பரிமாறினால் சூப்பர் போண்டா தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள தோதான இரண்டு நிமிட சட்னியையும் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்கலாம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். 2 கைப்பிடி அளவு தேங்காய் துருவல், 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் 2, சிறிய துண்டு இஞ்சி, பூண்டு பல் 4, கொத்தமல்லி தழை 1/2 கைப்பிடி, உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சட்னியாக அரைத்து இந்த போண்டாவுக்கு தொட்டுக்கொள்ள பரிமாறினால் சூப்பராக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருக்கா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.