- Advertisement -
- Advertisement -

ஆடி அமாவாசை என்பது நம் இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள். இது முன்னோர்களுக்கு பித்ரு காரியங்கள் செய்து, அவர்களின் ஆசிகளைப் பெறும் ஒரு விசேஷ நாளாகும். இந்த நாளில் செய்யக்கூடிய சில எளிய பரிகாரங்கள் மூலம் நாம் நமது முன்னோர்களின் நல்லாசிகளைப் பெற்று, வாழ்வில் சுபிட்சம் அடையலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. ஆடி அமாவாசையில் செய்ய மறக்கக்கூடாத விஷயங்கள் என்னென்ன? என்பதைத்தான் இனி இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

ஆடி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து புண்ணிய நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. இயலாதவர்கள் வீட்டில் தலைக்கு குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிராத்தம் செய்வது முக்கியமானது. அருகில் உள்ள கோயில்களிலோ அல்லது ஆற்றங்கரைகளிலோ தர்ப்பணம் கொடுக்கலாம். இது பித்ரு தோஷ நிவர்த்திக்கு உதவும்.

- Advertisement -

இந்த நாளில் ஏழைகளுக்கும், பசியால் வாடுபவர்களுக்கும் அன்னதானம் செய்வது மிகச் சிறந்த பரிகாரமாகும். குறிப்பாக கருப்பு எள் கலந்த உணவு, வெல்லம் கலந்த பாயசம் போன்றவற்றை தானம் செய்யலாம். பசுக்களுக்கு அகத்திக்கீரை, பழங்கள் வழங்குவதும் புண்ணியத்தைத் தரும். காகங்களுக்கு உணவு வைப்பது முன்னோர்களுக்கு உணவளிப்பதாக ஐதீகம். முன்னோர்களின் ஆசை பரிபூரணமாக பெற இவற்றையெல்லாம் தவறாமல் மறக்காமல் செய்ய வேண்டும்.

வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு தீபம் ஏற்றி, மலர்களால் அலங்கரித்து வணங்கலாம். அவர்களுக்குப் பிடித்தமான உணவுப் பண்டங்களை சமைத்து படைத்து வழிபடலாம். முடிந்தால், ஒரு ஜோடி புதிய வஸ்திரங்களை வாங்கி வைத்து, அதை முன்னோர்களுக்கு சமர்ப்பித்து பின்னர் ஒரு ஏழைக்கு தானம் செய்யலாம். இந்த எளிய பரிகாரங்களை ஆடி அமாவாசை அன்று சிரத்தையுடன் செய்வதன் மூலம், நமது முன்னோர்களின் ஆசிகளைப் பெற்று, குடும்பத்தில் அமைதியும், சுபிட்சமும் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் செய்யப்படும் புண்ணிய காரியங்கள், நமக்கு மட்டுமல்லாமல், நமது சந்ததியினருக்கும் நற்பலன்களைத் தரும்.

- Advertisement -

இந்த நாளில் அசைவம் சாப்பிடுவதோ அல்லது வயிறு நிறைய சாப்பிடுவதோ கூடாது. ஆரோக்கியமான சாத்வீகமான உணவுகளை சாப்பிட வேண்டும். சவரம் செய்வது, முடி வெட்டுவது, நகம் வெட்டுவது போன்ற விஷயங்களை எல்லாம் செய்யக்கூடாது. கோலம் போடக்கூடாது. குடும்பத்தின் சண்டை, சச்சரவுகளோடு இருக்கக் கூடாது. சுபகாரியங்கள், புது முயற்சிகள் போன்றவற்றுக்கு இது நல்ல நாளல்ல! இந்த நாளில் பசி என்று வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லவே கூடாது. உதவி என்று கேட்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து விட வேண்டும். முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாளில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களும் பெரும் பலன் தரக்கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
குலதெய்வ சாபம் அறிகுறிகள்

ஆடி அமாவாசை என்பது வெறும் சடங்கு அல்லது சம்பிரதாயம் மட்டுமல்ல! அது நமது முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியும், மரியாதையும் ஆகும். இந்த நாளில் செய்யப்படும் எளிய பரிகாரங்கள் கூட, நமது வாழ்வில் பெரும் மாற்றங்களை உருவாக்கும் வல்லமை கொண்டவை. நம்பிக்கையுடனும், பக்தியுடனும் இந்த காரியங்களைச் செய்வதன் மூலம், முன்னோர்களின் அருளைப் பெற்று, நமது வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம். இந்த ஆடி அமாவாசை நாளில் அனைவரும் முன்னோர்களை நினைத்து வழிபட்டு, அவர்களின் நல்லாசிகளைப் பெற வேண்டுகிறோம்.

- Advertisement -