
நம்மிடமும் நம்மை சுற்றியும் இருக்கக்கூடிய ஆற்றலுக்கு ஏற்றவாறு தான் நமக்கு நன்மைகளும் தீமைகளும் நடைபெறுகிறது. நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்றால் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்க வேண்டும். நம்முடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால் அதற்கும் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்க வேண்டும். இப்படி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க வேண்டும் என்றால் எதிர்மறை ஆற்றல்கள் இருக்கக் கூடாது. இப்படி எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் நம் உடல் சக்கரத்தை சீராக இயக்குவதற்கு தேங்காயை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கின்றன. அந்த சக்கரங்களை முறையாக நாம் இயக்குவதன் மூலம் நாம் நினைத்ததை நம்மால் நடத்த முடியும் என்று கூறுகிறது. நம்முடைய சித்தர்கள் இந்த சக்கரத்தை முறையாக இயக்கியதால் தான் அவர்களால் அந்த நிலைக்கு வர முடிந்தது. இப்படி நாம் இயக்குவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் மிகவும் எளிமையான தேங்காய் பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த பரிகாரத்தை நாம் ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்றே நல்ல தேங்காயாக பார்த்து ஒரு தேங்காயை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த தேங்காயில் இருக்கக்கூடிய குடும்பியை முழுவதுமாக எடுத்துவிட்டு ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் மஞ்சள் தூளை கலந்து அந்த மஞ்சள் தண்ணீருக்குள் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் தேங்காயை போட்டு விட வேண்டும்.
ஒரு நாள் முழுவதும் இந்த தேங்காய் அந்த தண்ணீரிலேயே இருக்கட்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். யாருடைய உதவியும் இல்லாமல் நாமே தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். மஞ்சள் தண்ணீரில் இருக்கும் இந்த தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காயில் இருக்கக்கூடிய மூன்று கண்களும் நம்முடைய தொப்புள் பகுதியில் இருப்பது போல் வைக்க வேண்டும். நேராக நிமிர்ந்து உட்கார்ந்து வைக்கலாம் அல்லது படுத்தவாரும் வைக்கலாம்.
இப்படி குறைந்தது பத்து நிமிடமாவது வைத்திருக்க வேண்டும். இந்த பத்து நிமிடத்தில் நமக்கு என்னென்ன வேண்டுதல்கள் இருக்கிறதோ அவை அனைத்தையும் நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தி கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு இந்த தேங்காயை எடுத்துக் கொண்டு போய் மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்தியில் சிதறு தேங்காயாக உடைத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று ஞாயிற்றுக்கிழமை தேங்காய் பரிகாரத்தை செய்ய நம்முடைய உடலில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிப்பதோடு உடல் சக்கரமும் இயங்க ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: வைகாசி விசாகம் அன்று சொல்ல வேண்டிய முருகர் மந்திரம்
எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு முக்கண்ணனான சிவபெருமானின் அருளால் வேண்டியது கிடைக்கும், நினைத்தது நடக்கும், காரிய தடைகள் விலகும்.