
சிற்றுண்டி என்ற ஒன்று நம் அனைவரின் வாழ்க்கையிலும் மாலை நேரத்தில் தேநீர் குடிக்கும் வேளையில் தேவைப்படும் உணவாக இருக்கிறது. அவ்வாறு நாம் சாப்பிடும் சிற்றுண்டி ஆரோக்கியமானதாகவும், அதே நேரம் வீட்டில் தயார் செய்ததாகவும் இருந்தால் அதனால் நம் உடம்பிற்கு எந்த வித தீய விளைவுகளும் ஏற்படுத்தாது. அந்த வகையில் இன்று நாம் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் வாழைப்பழத்தை வைத்து எப்படி போண்டா செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
மிகவும் மலிவாக கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றுதான் வாழைப்பழம். சில சமயங்களில் வாழைப்பழம் வீணாக போவதற்கும் வாய்ப்புகள் இருக்கும். அந்த சமயத்தில் நாம் இப்படி சுவையான முறையில் போண்டா செய்து கொடுத்தால் வாழைப்பழமும் காலி ஆகிவிடும், சிற்றுண்டிக்குரிய உணவும் தயாராகி விடும்.
வாழைப்பழ போண்டா செய்வதற்கு முதலில் 15 வாழைப்பழங்களை எண்ணெயில் போட்டு தோல் உரியும் அளவிற்கு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தோலுரித்து சிறிது சிறிதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் 20 கிராம் மிளகாய் தூளை சேர்க்க வேண்டும். அடுத்ததாக அதில் 10 கிராம் கரம் மசாலாவை சேர்க்க வேண்டும். பிறகு 300 கிராம் மைதாவை அதில் சேர்க்க வேண்டும்.
அடுத்ததாக 150 கிராம் கான்பிளவர் மாவை சேர்க்க வேண்டும். அத்துடன் 400 கிராம் பன்னீரையும் சேர்க்க வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயம் மூன்றை சேர்க்க வேண்டும். பொடியாக நறுக்கிய 4 பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
கூடுதல் சுவைக்காக 1/4 கிலோ கோஸ் மற்றும் இரண்டு கேரட்டை பொடியாக நறுக்கி அதில் சேர்க்க வேண்டும். இரண்டு ஸ்பூன் கஸ்தூரி மேத்தாவையும் அதில் சேர்க்க வேண்டும். சிறிது கொத்தமல்லித்தழை கருவேப்பிலை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும்.
போண்டா மாவு பதத்திற்கு மாவை நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிணையலாம். இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடான பிறகு அதில் நாம் போண்டாவை போட வேண்டும். இரண்டு புறமும் நன்றாக சிவந்த பிறகு போண்டாவை எடுத்து எண்ணெய் வடிகட்டியில் வைத்து வடிகட்டி சாப்பிட அனைவருக்கும் தரலாம்.
இதையும் படிக்கலாமே: தேங்காய் சட்னியை ஒரு முறை வித்தியாசமா இப்படி ருசியா செஞ்சு பாருங்க. இது வரைக்கும் இப்படி ஒரு சட்னியை ரெசிபி பத்தி நீங்க கேள்விகூட பட்டு இருக்க மாட்டீங்க.
மிகவும் சுவையான சத்து மிகுந்த வாழைப்பழ போண்டாவை செய்து கொடுத்து சிற்றுண்டி நேரத்தை ஆரோக்கியமான நேரமாக மாற்றலாம்.