
காலை உணவை சற்று விதவிதமாக சமைத்து கொடுத்தால் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். எப்பொழுதும் இட்லி, தோசை என்று ஒரே மாதிரியாக சாப்பிடும் அவர்களுக்கு முட்டை மற்றும் பிரெட் வைத்து செய்யும் இந்த சுவையான புதுவித காலை உணவை ஒரு முறை சமைத்துக் கொடுத்து பாருங்கள். நீங்கள் கொடுத்த உடனே மிகவும் ஆர்வமாக எவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டு முடிப்பார்கள் என்று உங்களுக்கே தெரியும். வாருங்கள் இந்த காலை உணவை எவ்வாறு சமைப்பது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பிரட் – 6 துண்டுகள், முட்டை – 3, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – முக்கால் ஸ்பூன், கரம் மசாலா – கால் ஸ்பூன், மிளகுத்தூள் – கால்ஸ்பூன், தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 6 ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, கால் ஸ்பூன் மிளகுத்தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் மிளகாய் தூள், மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களில் நான்குபுறமும் இருக்கும் லேயரை வெட்டி, பிரட் துண்டுகளை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு பிரட் துண்டில் வதக்கி வைத்துள்ள மசாலாவில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து வைத்து அதன் மீது மற்றொரு பிரட்டை வைத்து நன்றாக அழுத்தி விட வேண்டும். இவ்வாறு அனைத்து பிரட்களிலும் மசாலா வைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மசாலா வைத்துள்ள ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் கலக்கி வைத்துள்ள முட்டையில் நனைத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து முட்டையில் நனைத்து வைத்த பிரட்களை ஒவ்வொன்றாக ஆம்லெட் போன்று சுட்டு எடுக்க வேண்டும். ஒரு புறம் நன்றாக சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு நன்றாக சிவந்து வரும் வரை அடுப்பை சிறிய தீயில் வைத்து வேக விட்டு எடுக்க வேண்டும். இவ்வாறு மசாலா வைத்துள்ள அனைத்து பிரட் துண்டுகளையும் ஒவ்வொன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த சுவையான ப்ரெட் ஆம்லெட் மசாலாவை ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவை மிகவும் அற்புதமாகவும் மீண்டும் சாப்பிட வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருக்கும்.