
தென்னிந்தியாவில் இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள் பிரபலமான காலை உணவாக உள்ளன. அதிலும் தோசை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக உள்ளது. தோசை மிகவும் மிருதுவாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். தோசையில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்றான மிகவும் சாஃப்டாக, பஞ்சு போல் இருக்கும் பன் தோசை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி – 2 கப், வெந்தயம் – அரை ஸ்பூன், வெள்ளை அவல் – ஒரு கப், எண்ணெய் – 3 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – அரை ஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் பச்சரிசி எடுத்துக்கொண்டு, அதனை இரண்டு முறை நன்றாக கழுவிவிட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து, 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். நான்கு மணி நேரம் கழித்து அதனுடன் ஒரு கப் வெள்ளை அவலை சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஊற வைத்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவினை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாகப் கரைத்து 8 மணி நேரம் அப்படியே புளிக்க வைத்துவிட வேண்டும்.
பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொண்டு, ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து அதனுடன் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
எட்டு மணி நேரம் கழித்து அரைத்து வைத்துள்ள தோசை மாவுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பிறகு அடுப்பின் மீது தோசைக்கல் அல்லது ஆப்ப கடாயை வைத்து அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தோசை சுட வேண்டும். தோசை ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் அதனை திருப்பி போட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் ஓரங்களில் மொரு மொருவென்று நடுவில் மிகவும் சாஃப்டாக பஞ்சு போன்று இருக்கும் பன் தோசை தயாராகிவிட்டது.
இந்த பன் தோசையுடன் சேர்த்து சாப்பிட ஒரு தக்காளி, ஒரு வெங்காயம், 4 பல் பூண்டு, நான்கு சீவல் தேங்காய் இவற்றை ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, உப்பு சேர்த்து அரைத்து பிறகு தாளித்து இந்த தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் இதன் சுவைக்கு ஈடு இணையே இருக்காது. தினமும் ஒரேமாதிரியாக தோசை செய்து கொடுக்காமல் ஒருமுறை உங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறு வித்தியாசமான பன் தோசை செய்து கொடுங்கள் ரசித்து சாப்பிடுவார்கள்.