
வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமையில் பெரும்பாலோனோர் வீட்டில் அசைவம் செய்வது வழக்கம். அதிலும் பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் அதுவே பலரது வீடுகளிலும் சமைக்கப்படுவதுண்டு. ஆனால் நாம் ஒவ்வொரு முறை பிரியாணி செய்யும் போதும் ஏதாவது ஒரு சிறு சுவை குறைவு ஏற்படுவது வழக்கம். இந்த முறையை பின்பற்றி சிக்கன் பிரியாணி செய்து பாருங்கள், பின்னர் உங்களுக்கு வீட்டில் கிடைக்கும் பாராட்டு தனிதான். வாங்க எப்படி அதை சமைப்பது என பார்ப்போம்.
சிக்கன் மசாலா செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
சிக்கன் -1 கிலோ கிராம், எண்ணெய் – 100 கிராம், பெரிய வெங்காயம் -1/4 கிலோ கிராம், பச்சைமிளகாய் – 5, புதினா ஒரு கை பிடி, கொத்தமல்லி கை ஒரு பிடி, சிக்கன் மசாலா – 2 ஸ்பூன், தனியா தூள் – 2 ஸ்பூன், தனி மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன், மிளகுத் தூள் -1 ஸ்பூன், கரம் மசாலா -1 ஸ்பூன், தயிர் – 10 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 5 ஸ்பூன் உப்பு தேவையான அளவு.
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் காய்ந்ததும் 150 கிராம் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும், நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள 1/4 கிலோ வெங்காயத்தை எண்ணெயில் நன்கு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா இவை மூன்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் நன்கு சுத்தம் செய்த சிக்கனை எடுத்துக்கொண்டு அதில் நாம் மசாலாவிற்காக எடுத்து வைத்துள்ள எண்ணெய், தயிர், தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சிக்கன் மசாலா, மிளகு தூள், உப்பு மற்றும் இதனுடன் பொரித்த வெங்காயம் மற்றும் நாம் அரைத்து எடுத்த மிளகாய், கொத்தமல்லி, புதினா கலவையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். மசாலா ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நன்கு ஊறும் வரை அரைமணிநேரம் அவ்வாறே விடவேண்டும்.
பிரியாணி தாளிக்க தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி -1 கிலோ, வெங்காயம – 1/2 கிலோ, தக்காளி -1/2 கிலோ, என்னை – 150 கிராம், நெய் – 50 கிராம், இஞ்சி பூண்டு விழுது – 50 கிராம், சிறிதளவு பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, பச்சை மிளகாய் – 5, புதினா – 1/2 கட்டு, கொத்தமல்லி – 1/2 கட்டு, எலுமிச்சை பழம் -1, தயிர் – 10 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு.
அடுப்பில் ஒரு பெரிய பாத்திரம் வைத்து பாத்திரம் சூடானதும் முதலில் நெய் மற்றும் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணை காய்ந்ததும் அதில் பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய் அன்னாசி பூ ஆகியவற்றை போடவேண்டும். அவை பொரிந்ததும் அதில் நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறமாக வெங்காயம் குழையும் வரை வதக்க வேண்டும். அதன் மீது இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் தக்காளி, பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்கு ஒன்று சேர்ந்து வதங்கி சுருண்டு வந்ததும் நாம் ஊற வைத்துள்ள கறியுடன் கூடிய மசாலாவையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு தயிர் எலுமிச்சை பழச்சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
பின்பு பிரியாணிக்கு தேவையான தண்ணீர் ஊற்றி அதாவது ஒரு டம்ளர் அரிசி எடுத்து இருந்தால் அதற்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்(அரிசியை பொருத்தில் இது மாறுபடும்). தண்ணீர் நன்கு சூடேறி கொதித்தவுடன் அரிசியை அதனுடன் சேர்க்க வேண்டும். இப்போது காரம் மற்றும் உப்பின் அளவை சரிபார்த்து ஒரு தட்டை போட்டு மூட வேண்டும்.
இந்த கலவை நன்கு கொதித்தவுடன் அடுப்பின் தீயை சிறியதாக்கி பாத்திரத்தின் மீது தட்டை போட்டு மூடி அதன் மீது ஒரு பெரிய பாத்திரம் நிறைய தண்ணீர் வைக்க வேண்டும். அப்போதுதான் பிரியாணியில் இருந்து வரும் காற்று வெளியே செல்லாமல் இருக்கும். அத்துடன் பிரியாணியும் சீக்கிரம் தயாராகி சுவையுடன் கிடைக்கும். ஒரு 10 நிமிடத்திற்கு பிறகு மேலே உள்ள தண்ணீர் நிறைந்த பாத்திரத்தை எடுத்துவிட்டு தட்டை திறந்து பார்த்தால் சுவையான சிக்கன் மசாலா பிரியாணி கமகமவென்று தயாராகி இருக்கும். இப்பொழுது பிரியாணியை பரிமாறி கொடுக்கலாம். இந்த பிரியாணி செய்முறை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் உடனே இன்றே உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.