
பிரெட்டை எப்போது பார்த்தாலும் வெறும் ரோஸ்ட் செய்து சாப்பிட்டால் நிச்சயமாக யாருக்கும் பிடிக்காது. குழந்தைகளுக்கு கொஞ்சம் வித்தியாசமாக, வித்தியாசமான பொருட்களை சேர்த்து பிரெட்டை அலங்கரித்து ரோஸ்ட் செய்து கொடுத்து பாருங்கள். பிரட்டை பிடிக்கவே பிடிக்காது என்று சொல்லுபவர்கள் கூட இப்படி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையான சிம்பிளான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்ம வீட்டு தோசைக் கல்லிலேயே சுட்டு எடுத்தால் பிரட் சில்லி கார்லிக் ரோஸ்ட் சூப்பரா ரெடியாகிடும்.
முதலில் சில்லி கார்லிக் பட்டர் தயார் செய்து கொள்வோம். ஒரு அகலமான பவுலில் வெண்ணை – 1/4 கப் அளவு, துருவிய பூண்டு விழுது (6 பூண்டு பல்) – 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 ஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் – 2 ஸ்பூன், மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். (சாஃப்டான வெண்ணை இருக்கும் அல்லவா அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.) இந்த எல்லாப் பொருட்களையும் ஒரு ஸ்பூனை வைத்து கலக்கும்போது நமக்கு கிரீமியான கார்லிக் பட்டர் தயாராகி இருக்கும். இது அப்படியே இருக்கட்டும்.
உங்களுக்கு கோதுமை பிரட் அல்லது ஒயிட் பிரட் எது தேவையோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நீளவாக்கில் துண்டு துண்டுகளாக வெட்டிக் கொண்டாலும் சரி அல்லது உங்களுக்கு தேவையான வடிவத்தில் பிரட் துண்டுகளை வெட்டி அதன் மேலே இந்த கார்லிக் வெண்ணையை தடவி கொள்ளுங்கள்.
ஒரு பக்கம் மட்டும் இந்த கார்லிக் வெண்ணையை தடவி கொள்ளலாம். நீங்கள் விருப்பப்பட்டால் நான்கு பக்கத்திலும் இந்த வெண்ணையை தடவி கூட, ரோஸ்ட் செய்து சாப்பிடலாம். அப்படியே மொறுமொறுப்பாக கிடைக்கும். எல்லா பிரட் துண்டுகளிலும் முதலில் இந்த வெண்ணை கிரீமை தடவி விடுங்கள்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். தோசைக்கல்லில் தயாராக இருக்கும் வெண்ணை தடவிய பிரெட் துண்டுகளை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக இரண்டு பக்கமும் பொரித்து எடுத்தால் சூப்பரான பிரட் ரோஸ்ட் தயார். இதில் உங்களுக்கு தேவைப்பட்டால், பிரெட்டை ரோஸ்ட் செய்துவிட்டு, மேல் பக்கம் சீஸ் துருவலை தூவி லேசாக சூடு செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஸ்னாக்ஸ் ரெசிபி ஆகவும் இருக்கும்.
கடைகளுக்கு செல்லாமலேயே, வீட்டிலேயே இப்படி குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கும்போது இதற்கு ஆகும் செலவு மிக மிக குறைவு என்பதும் குறிப்பிடதக்கது. உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. ஈஸி ரெசிபி. டேஸ்டி ரெசிபி. பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கும்.