- Advertisement -
சமையல் குறிப்புகள்

சுவையான சின்ன வெங்காய கார குழம்பை ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க. சுட சுட சாதத்திற்கு இதைவிட சூப்பர் குழம்பு வேறு எதுவுமே இருக்க முடியாது.

- Advertisement -

காய்கறியுடன் வெங்காயம் சேர்த்து தான் குழம்பு வகைகளை நம்முடைய வீடுகளில் செய்வோம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக சின்ன வெங்காயத்தை வைத்து ஒரு கார குழம்பு எப்படி வைப்பது என்று தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை என்றாலும், பரவாயில்லை. பத்து பதினைந்து பல் சின்ன வெங்காயத்தை வைத்து இந்த கார குழம்பை வைத்து பாருங்கள். ஒரு குண்டான் சோறு வடித்தாலும், சாப்பாடு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். தொட்டுக்கொள்ள ஒரு அப்பளம் இருந்தால் கூட போதும். சரி வாங்க அந்த சூப்பர் ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

முதலில் 200 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை தோலுரித்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக சிறிய எலுமிச்சம்பழ அளவு புளியை தண்ணீரில் போட்டு ஊற வைத்து புளி கரைசலை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

10 பல் பூண்டை தோலுரித்து பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 2 மீடியம் சைஸ் தக்காளி பழங்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து, இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது குழம்பை தாளித்த செல்லலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் 3 டேபிள்ஸ்பூன் ஊற்றி நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, வர மிளகாய் – 2, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு பல் இவைகளை சேர்த்து முதலில் நன்றாக வதக்கி விட வேண்டும்.

பூண்டு நன்றாக வதங்கியவுடன், தோல் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை கடாயில் சேர்த்து, சின்ன வெங்காயத்தின் பச்சை வாடை நீங்கும் வரை மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வதக்கி கொள்ள வேண்டும். அடுத்தபடியாக குழம்பு மிளகாய்த்தூள் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து, 30 வினாடிகள் வரை வதக்கிவிட்டு, அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை ஊற்றி மீண்டும் 2 நிமிடங்கள் வதக்குங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை கடாயில் ஊற்ற வேண்டும். குழம்பை கலந்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பை மூடி போட்டு ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் கொதிக்க வைத்தால் போதும். இடையிடையே குழம்பை திறந்து கலந்து விடுங்கள்.

புளியின் பச்சை வாடை நீங்கி, குழம்பில் ஊற்றிய எண்ணெய் மேலே பிரிந்து வரும் போது, அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதாங்க சூப்பரான சின்ன வெங்காய கார குழம்பு தயார். சுடசுட சாதத்தோடு ஊற்றி சாப்பிட்டு பாருங்க. அப்ப தான் இதன் சுவை உங்களுக்கு புரியும். மிஸ் பண்ணாம ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: உங்களுடைய வீட்டில் குழம்பு மிளகாய் பொடி இல்லையென்றால், வர மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்தும் இந்த குழம்பை வைக்கலாம். ஆனால் சீரகப் பொடி – 1/2 ஸ்பூன் தனியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -