- Advertisement -
- Advertisement -

“தீபாவளி” என்றாலே நம் கண் முன்னே நிற்பது தீபங்களின் வரிசை, இனிப்பின் சுவை, புது மணம் கமழும் ஆடை, விண்ணை அதிரவைக்கும் பட்டாசு சத்தம். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் பின்னால் ஆழமான ஒரு ஆன்மீகக் கதை புதைந்திருக்கிறது. அது வெறும் புராண நிகழ்வு அல்ல, ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் நிகழ வேண்டிய மாற்றத்தைக் குறிக்கும் தத்துவமாகும். 2025 நவநாகரிக உலகிலும் ஏன் தீபாவளி கொண்டாடப்படுகிறது? என்பதைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

முதல் கதை: நரகாசுர வதம் – அகங்கார அழிவு
தென்னிந்தியாவில் பரவலாகக் கொண்டாடப்படும் தீபாவளியின் முக்கியக் கதை, ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வாகும். நரகாசுரன், பூமாதேவிக்குப் பிறந்தவன். அவன் பெற்ற வரத்தால் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாதவன். ஆனால், அவன் அதிகாரத்தின் உச்சியில் சென்று தேவர்களுக்கும், மக்களுக்கும் பெரும் துன்பம் அளித்தான். மனிதனை கீழ்மைக்கு இழுத்துச் செல்லும் அனைத்துத் தீய குணங்களுக்கும், பாவ சிந்தனைகளுக்கும் அவன் உருவமாக இருந்தான்.

- Advertisement -

அவனுடைய நகரத்தின் பெயரே ‘ப்ராக் ஜோதிஷபுரம்’ – அதாவது, ‘முந்தைய ஒளியை ஆத்ம ஒளியை இழந்த நகரம்’. அவன் ஆத்ம ஒளியற்று, வெறும் உடல், புலன்கள், அகங்காரம் இவற்றிலேயே நம்பிக்கை வைத்திருந்தான். நரகாசுரனின் கொடுமை தாங்காமல், அவனுடைய தாயான பூமாதேவியே, இறைவன் கிருஷ்ணரிடம் அவனை அழிக்க வேண்டினாள். கிருஷ்ணர் தன் மனைவி சத்யபாமாவின் (பூமாதேவியின் அவதாரமே சத்யபாமா என்றும் ஒரு கூற்று) துணையுடன் அவனை வதம் செய்தார்.

இறக்கும் தருவாயில் நரகாசுரன், “இன்று என் வீழ்ச்சியைக் கொண்டாடும் மக்கள், இனிப்புடன் விளக்கேற்றி, இருள் விலகி மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்” என்று வரம் கேட்டான். இந்த நிகழ்வின் ஆன்மீகச் சாரம் என்ன தெரியுமா? நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கொடிய ‘நரகாசுரன்’ தான் அகங்காரம் (Ego). ஞான ஒளியை மறைத்து, நம்மை இருளில் ஆழ்த்துவது அகங்காரம் தான். இறைவன் அருளால், நாம் நம்முள் இருக்கும் ஆணவம் என்னும் இருளை நீக்கினால், அங்கே ஆனந்தமும், ஒளியும் பிறக்கும் என்பதையே இந்த நரகாசுர வதம் உணர்த்துகிறது.

- Advertisement -

இரண்டாம் கதை: இராமரின் அயோத்தி வருகை – தர்மத்தின் வெற்றி
வட இந்தியாவில் இராமாயணக் கதையோடு தீபாவளி தொடர்புபடுத்தப்படுகிறது. இராவணனை அழித்து, 14 ஆண்டுகள் வனவாசத்தை முடித்து ஸ்ரீராமர், சீதை, இலட்சுமணனுடன் அயோத்திக்குத் திரும்பிய நாளை மக்கள் கொண்டாடினர். அந்த ஆனந்தத் திருநாளில், அயோத்தி மக்கள் ஊர் முழுவதும் தீபங்களை வரிசையாக ஏற்றி, இருளை நீக்கி, இராமரை வரவேற்றனர். ‘தீபம் + ஆவலி’ (விளக்கு + வரிசை) என்பதே ‘தீபாவளி’ ஆனது. இந்த நிகழ்வின் ஆன்மீகப் பொருள் என்ன? ‘ராமன்’ என்றால் மகிழ்ச்சி தருபவன்’ என்று பொருள். ‘அயோத்தி’ என்றால் ‘பகைவரால் வெல்ல முடியாதது’ என்று பொருள்.

தீய சக்தியான இராவணனின் ஆதிக்கம் இருந்த போது மகிழ்ச்சியும், தர்மமும் நாட்டில் குறைந்திருந்தன. இராவணனை அழித்து இராமன் அயோத்திக்குத் திரும்பியதும், நாட்டில் மகிழ்ச்சி நிலைத்தது. நம் மனம் தான் அயோத்தி. நம்முள் தர்மம் இருக்கும்போது அதாவது ராமன் இருக்கும்போது மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அறியாமை என்னும் ராவணன் நம் மனதை ஆட்கொள்ளும்போது தர்மம் விலகி, இருள் சூழ்ந்து, மகிழ்ச்சி குறையும்.

இதையும் படிக்கலாமே:
தீபாவளி இறைவழிபாடு

நாம் தீபாவளி அன்று எத்தனை விளக்குகளை ஏற்றினாலும், அதன் ஆன்மீகச் செய்தி ஒன்றே! “இருள் விலகி ஒளி பிறக்கட்டும்” என்பது தான். வெளிச்சம் என்பது அறிவு, உண்மை, ஆன்மீக விழிப்புணர்வு. இருள் என்பது அறியாமை, பொய், தீய எண்ணங்கள். விளக்கு ஏற்றும் போது, நாம் உலகியல் இருளை நீக்குவதுடன், நம் அகத்தில் குடிகொண்டிருக்கும் அறியாமை, பேராசை, பொறாமை போன்ற இருண்ட குணங்களையும் நீக்கி, ஞான ஒளிக்கு வழிவிட வேண்டும் என்பதே தீபாவளியின் மிக உயர்ந்த ஆன்மீகத் தத்துவம். ஆகவே, இந்த தீபாவளி, நம் மனதின் இருளை நீக்கி, ஞானமெனும் ஒளியைப் பற்றவைத்து, உண்மையான ஆனந்தத்தை அடைய உறுதி கொள்ளும் திருநாளாக அமையட்டும்! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

- Advertisement -