
சித்திரை மாதம் என்றதும் நம் நினைவிற்கு வருவது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குவதுதான். மதுரையில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழ்வதுதான் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம். அந்த ஆலயத்தில் நடக்கக்கூடிய மிகப்பெரிய திருவிழாவாக தான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் மதுரைக்கு சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வதன் மூலம் மீனாட்சி அம்மனின் அருளை பெற முடியும். ஒரு வேளை மதுரைக்கு சென்று நேரில் தரிசனம் செய்ய இயலவில்லை என்பவர்கள் வீட்டிலேயே செய்ய வேண்டிய எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பராசக்தி மீனாட்சி ஆக அவதரித்து பலவிதமான திருவிளையாடல்களை மேற்கொண்டார். அதேபோல் சிவபெருமானும் சுந்தரேஸ்வரராக வந்து சில திருவிளையாடல்களை செய்து மீனாட்சியம்மனை மணந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவர்கள் இருவரின் திருமண வைபோகம் நடைபெறக்கூடிய நாளில் மதுரையே திருவிழா கோலம் பூண்டு இருக்கும் என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட திருக்கல்யாணம் மே மாதம் எட்டாம் தேதி காலை 8:35 மணியிலிருந்து 8:59 மணிக்குள் நடைபெறும். அந்த நேரத்தில் சுமங்கலி பெண்கள் பலரும் தங்களுடைய தாலி கயிற்றை மாற்றி அணிந்து கொள்வார்கள்.
இதோடு சேர்த்து நம்முடைய வீட்டு பூஜை அறையில் மீனாட்சி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக கிழக்கு பார்த்தவாறு மூன்று தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபங்கள் நெய் தீபமாக இருப்பது மிகவும் சிறப்பு. மீனாட்சி அம்மனின் படம் இல்லை என்பவர்கள் சிவபெருமானின் படத்திற்கு முன்பாகவும் இந்த தீபத்தை ஏற்றலாம். பிறகு நெய்வேத்தியமாக நெய் சாதம், நெய்யால் செய்த இனிப்பு வகைகளை வைக்க வேண்டும். இப்படி வைத்துவிட்டு முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு சிவபெருமானை வழிபாடு செய்து விட்டு மீனாட்சி அம்மனை மனதார நினைத்துக் கொண்டு “ஓம் மீனாட்சி தாயே போற்று ஓம்” என்னும் மந்திரத்தை 54 முறை கூற வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.
மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கக்கூடிய அந்த நேரத்தில் இந்த முறையில் நாம் வழிபாடு செய்வதன் மூலம் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தீர்க்க சுமங்கலி யோகம் உண்டாகும். திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கு விரைவிலேயே நல்ல கணவர் அமைவார். நோய் நொடிகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் சுபிட்சமும் ஐஸ்வரியமும் பெருக ஆரம்பிக்கும். இந்த வழிபாட்டை செய்வதோடு அன்றைய தினம் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்வதன் மூலம் பலவிதமான நன்மைகளை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே:பலதரப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரம்
மீனாட்சி அம்மனின் அருளை பெறுவதற்கும் தீர்க்க சுமங்கலி யோகத்தை பெறுவதற்கும் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கக்கூடிய நேரத்தில் இந்த முறையில் நாம் மீனாட்சி அம்மனை வழிபாடு செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.