- Advertisement -
சமையல் குறிப்புகள்

ஒரு அரிசி கூட சேர்க்காமல் ஆரோக்கியம் தரும் இட்லியை இப்படியும் செய்யலாம். கோதுமை மாவு இட்லி செய்வது எப்படி?

- Advertisement -

எப்போதும் போல அரிசியில் செய்த இட்லியை தானே சமைத்து சாப்பிடுகின்றோம். கொஞ்சம் வித்தியாசமாக கோதுமை மாவில் உடனடியாக 30 நிமிடத்தில் இப்படி ஒரு இட்லியை சுட்டு சாப்பிட்டு பாருங்கள். இதுவும் சாப்பிடுவதற்கு சுவையாகத் தான் இருக்கும். அதேசமயம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்படி கோதுமை மாவில் சமைத்த பலகாரங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. சூப்பரான சுவையான கோதுமை மாவு இட்லி எப்படி செய்வது.

சாதாரணமாக நாம் சப்பாத்தி செய்வோம் அல்லவா அந்த கோதுமை மாவில் இந்த இட்லியை செய்யலாம். முதலில் 1 கப் அளவு கோதுமை மாவை எடுத்து ஒரு கடாயில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கரண்டியை வைத்து மாவை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். மாவு கடாயில் நன்றாக சூடான பிறகு உடனடியாக அடுப்பை அணைத்து விடுங்கள். அப்படியே உங்களுடைய கையில் மாவை எடுத்து பிடித்தால் பிடிக்க முடியாத அளவிற்கு மாவு சூடாகி இருக்க வேண்டும். மாவு கருகி விட்டால் இட்லி சுவையாக இருக்காது ஜாக்கிரதை.

- Advertisement -

வறுத்த இந்த 1 கப் அளவு கோதுமை மாவுக்கு, 1 கப் அளவு தயிர் ஊற்றி, கட்டியில்லாமல் கலந்து, கொஞ்சமாக தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு கலந்து இட்லி மாவு பக்குவத்திற்கு இந்த மாவை தயார் செய்து ஒரு மூடி போட்டு 20 நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

மாவு நன்றாக ஊறி வந்த பிறகு இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெயில் கடுகு – 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 10 பொடியாக உடைத்தது, பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு மணக்க மணக்க தாளித்து இதை அப்படியே கரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவில் ஊற்றி 1/2 ஸ்பூன் ஆப்ப சோடா போட்டு கலந்து எப்போதும் போல இட்லி வார்க்க வேண்டியது தான்.

- Advertisement -

வழக்கம்போல துணி போட்டும் இந்த இட்லியை வார்க்கலாம். அப்படி இல்லை என்றால் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் இந்த மாவை வார்த்து இட்லி பானையில் வைத்து மிதமான தீயில் ஒரு 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இட்லி வெந்து கொஞ்சம் சூடு ஆறிய பிறகு, இட்லி தட்டில் இருந்த இட்லியை எடுத்தால் இட்லி சூப்பராக நமக்கு கிடைக்கும்.

இட்லிக்கு மணக்க மணக்க தாளிப்பு போட்டு இருக்கிறோம் அல்லவா. வெறும் தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். அப்படி இல்லை என்றால் வெறும் மிளகாய் பொடி வைத்து கூட சாப்பிட்டு பாருங்களேன். அவ்வளவு ருசியாக இருக்கும். இட்லி மாவு தோசை மாவு பிரிட்ஜில் இல்லை எனும்போது இந்த குறிப்பு எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்.

- Advertisement -