
நிறைய பேருக்கு இன்று மன அழுத்தம் காரணமாக வேலை பளு காரணமாக அதிகப்படியான முடி உதிர்வு ஏற்படுகின்றது. நிறைய வேலை பார்ப்பதால் உடல் சோர்வு ஏற்படுகிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை நாம் சாப்பிடுவது கிடையாது. இதனால் சருமத்தில் சீக்கிரம் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். எந்த அளவிற்கு காசு சம்பாதிக்க நாம் கஷ்டப்படுகின்றமோ, அந்த அளவிற்கு ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை சாப்பிடவேண்டும். அதிகப்படியான சத்துக்கள் நிறைந்த 3 பொருட்களை வைத்து இன்று நாம் சூப்பரான ஒரு ரெசிபியை பார்க்கப் போகின்றோம். தினமும் இந்த ஒரு லட்டுவை சாப்பிட்டு வந்தாலே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்து நமக்கு கிடைக்கும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை நாம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்: எள்ளு – 1/2 கப், ஆளி விதை – 1 கப், அவல் – 1/2 கப், தண்ணீர் – 1/2 கப், வெல்லம் – 1 கப், ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன். (எல்லாப் பொருட்களையும், தண்ணீரை கூட ஒரே கப்பில் தான் அளக்க வேண்டும்.)
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அந்த கடாய் நன்றாக சூடானதும் எள்ளு – 1/2 கப் போட்டு படபடவென பொறிய வைத்து இந்த எள்ளை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தது அதே கடாயில் ஆளி விதை – 1 கப் போட்டு படபடவென பொரிந்து வரும் அளவிற்கு வறுத்து இதையும் எள்ளுடன் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள். ஆளி விதை என்பது ஆங்கிலத்தில் flax seeds என்று சொல்லுவார்கள்.
அடுத்து அதே கடாயில் – 1/2 கப் அளவு பாதாமை போட்டு பொன்னிறம் வரும் வரை வறுத்து இந்த பாதாமை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் மிக்ஸி ஜாரில் ஆறிய பாதாமை போட்டு பொடியாக அரைத்து ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
அதன் பின்பு அதே மிக்ஸி ஜாரில் வறுத்து ஆறவைத்து இருக்கும் எள்ளு ஆளிவிதை இந்த 2 பொருட்களையும் போட்டு நன்றாக பொடி செய்து இதையும் அரைத்த பாதாம் பொடியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது நமக்கு அரைத்த எள்ளு, பாதாம், ஆளி விதை இந்த மூன்றும் தயாராக உள்ளது. இது ஒரு பவுலில் அப்படியே இருக்கட்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, 1 கப் அளவு வெல்லம் போட்டு, கரைத்து வடிகட்டிய வெல்லக் கரைசலை, மீண்டும் அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 1 ஸ்பூன் ஏலக்காய் பொடியை போட்டு கொதிக்கவிடுங்கள். வெல்லக் கரைசல் நன்றாக கொதித்து பிசுபிசுப்பு தன்மை வரும். லேசாக ஒரு கம்பிப் பாகு பதம் வந்ததும், இந்த வெல்லக் கரைசலில் அரைத்து வைத்திருக்கும் பொடியை கொட்டி நன்றாக கலந்து விட்டு, இறுதியாக ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலந்து அடுப்பை அணைத்து விடுங்கள்.
இந்தக் கலவை கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உங்களுக்கு தேவையான அளவு உருண்டைகளாக பிடித்து, ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் 10 லிருந்து 15 நாட்கள் கெட்டுப்போகாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஒரு லட்டு சாப்பிட்டுவர உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் நம்ப முடியாத வித்தியாசத்தை காணலாம். ஒரு நாள் இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு பலனை எதிர்பார்க்க கூடாது. தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு பாருங்கள். வித்தியாசம் உங்களுக்கே தெரியும்.