- Advertisement -
சமையல் குறிப்புகள்

இன்ஸ்டன்ட் சட்னி பொடி – காலை நேரத்தில் வேலையைக் குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்த உதவும் அற்புதமான ரெசிப்பி செய்வது எப்படி

- Advertisement -

உங்கள் வீடுகளில் காலை அல்லது மாலை வேலைகளில சமைக்கும் இட்லி அல்லது தோசைக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு வகை சட்னியை தயார் செய்து தான் ஆக வேண்டும். சில சமயங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டிருக்கலாம். அந்த நேரத்தில் உங்களால் சட்னி அரைப்பது என்பது இயலாத காரியம் ஆகும். அது போன்ற நேரங்களிலும், தொடர்வண்டி பயணங்களின் போதும், வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் பொழுதும், இந்த சட்னி பொடியை முன்னரே தயார் செய்து வைத்திருந்தால், எப்பொழுது உங்களுக்கு வேண்டுமா அந்த நேரங்களில் எளிதாக, உடனே பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இன்ஸ்டன்ட் சட்னி பொடி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, பச்சை நிலக்கடலை – கால் கப், பொட்டுக்கடலை – அரை கப், எள் – 2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 5 ஸ்பூன், பெருங்காயப்பொடி – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – 5 ஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, பூண்டு – ஐந்து பல், கறிவேப்பிலை – 4 கொத்து, வரமிளகாய் – 5, உப்பு – ஒன்றரை ஸ்பூன்.

- Advertisement -

இன்ஸ்டன்ட் சட்னி பொடி செய்முறை:
அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல், தேங்காயை தவிர மற்ற பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து எடுக்க வேண்டும். வருத்தெடுத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து முக்கால் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் துருவிய தேங்காயை சேர்த்து, நன்றாக பொன்னிறமாக சிவந்து வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வதக்கிய தேங்காயை முக்கால் பதத்தில் அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து, அனைத்தையும் மீண்டும் ஒரு முறை நன்றாக பொடித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த பொடியில் தாலிப்பை சேர்க்க வேண்டும். அதை எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு கொத்து கருவேப்பிலை, நான்கு வரமிளகாய் சேர்த்து, தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்த பொருட்களை அரைத்து வைத்துள்ள பொடியுடன் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:
ஒரு சிறிய கிண்ணத்தில் தயார் செய்து வைத்துள்ள இட்லி பொடியை ஒரு டம்ளர் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றுடன் ஒன்று அல்லது ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, நன்றாக கலந்துவிட வேண்டும். அவ்வளவு தான் இரண்டே நிமிடத்தில் உங்களுக்கு தேவையான சட்னி தயாராகிவிட்டது. பின்னர் இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட இதன் ருசி அவ்வளவு அருமையாக இருக்கும்.

இந்த சட்னி பொடியில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். முடிந்தவரை இதை ஏர் டைட் கண்டைனர் பாக்சில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இந்த சட்னி பொடியில் தேங்காய் சேர்த்து அரைத்துள்ளதால் வெளியில் வைத்து 15 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தினோம் என்றால் ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும். இந்த சட்னி பொடியில் தேங்காக்கு பதிலாக கொப்பரை தேங்காய் சேர்த்து செய்தால் இன்னும் அதிக நாட்கள் கூட வெளியில் வைத்து பயன்படுத்தலாம்.

- Advertisement -