
அடை என்றதும் நம் நினைவிற்கு வருவது பல வகை பருப்புகள், தானியங்கள் ஆகியவற்றைக் கலந்து செய்யும் அடை தான். ஆனால் நம் அண்டை மாநிலமான கேரளாவில் இலை அடை என்று ஒரு அடையை செய்வார்கள். அது மிகவும் சுவையாக இருக்கும். ஒருமுறை இதை செய்தால் திரும்பத் திரும்ப இதை செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கே தோன்றும். அப்படிப்பட்ட இலை அடையை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் காண்போம்.
பலா சுளைகள் 12, வெல்லம் – 1/2 கிலோ, தேங்காய் – 1, பச்சரிசி – 1 கப், புழுங்கல் அரிசி – 1 கப், நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், வாழை இலை – தேவைக்கேற்ப, உப்பு – தேவைக்கேற்ப.
முதலில் இரண்டு வகை அரிசிகளையும் ஒன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற விட வேண்டும். ஊறிய பின்பு, உப்பு சேர்த்து நைசாக மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். மறு புறம் வெல்லத்தை தூளாக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். கொதித்த பிறகு அந்த வெள்ளத்தை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பலாச்சுளைகளை கொட்டை நீக்கி சுத்தப்படுத்த வேண்டும். சுத்தப்படுத்தப்பட்ட பலா சுளைகளை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய பலாச்சுளைகளை, அந்த வெல்ல கரைசலுடன் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். வெல்ல கரைசல் பாகு பதமாக வந்தவுடன், அதில் தேங்காயை துருவி போட வேண்டும். பிறகு அதை நன்றாக கிளறி இறக்கி வைக்க வேண்டும். இதைத்தான் நாம் பூரணம் என்று சொல்வோம்.
பிறகு அடையின் அளவைப் பொறுத்து வாழை இலையை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். வெட்டிய அந்த வாழை இலைகளை சிறிது நேரம் வெயிலிலோ அல்லது அனலிலோ காட்டி வாட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இலைகளை எடுத்து அதில் அரிசி மாவை அடை மாதிரி லேசாக தடவ வேண்டும்.
இதையும் படிக்கலாமே: அஜீரணத்தை போக்கி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பசியை தூண்டும் சுவையான இஞ்சி புளி வீட்டிலேயே மிக சுலபமாக இப்படி செய்து பாருங்கள்.
பிறகு அதில் பலாச்சுளை பூரணத்தை ஒரு பிடி அளவு வைத்து, லேசாக தடவி மடித்து விட வேண்டும். மடித்த இந்த வாழை இலைகளை இட்லி பானையில் வைத்து மூடி வேக வைக்க வேண்டும். 10 நிமிடத்தில் வெந்துவிடும். வெந்த பிறகு அதை எடுத்து சூடாக பரிமாற வேண்டும். மிகவும் இனிப்பான சுவையான பலா சுளை இலை அடை தயார்.