
இந்த லட்டுவை ரவையை வைத்து செய்யவில்லை என்றால் வேறு எந்த பொருளை வைத்து செய்ய முடியும். கெஸ் பண்ணிட்டீங்களா? ஜவ்வரிசி தாங்க அந்த பொருள். ஜவ்வரிசியை அரைத்து வருத்து, சூப்பரான ஒரு லட்டு ரெசிபி. வாயில் வைத்தவுடன் அப்படியே கரைந்து செல்லக்கூடிய ஒரு லட்டு ரெசிபி தான் இன்றைக்கு உங்களுக்காக. ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த லட்டுவை ஜவ்வரிசியில் தான் செய்தீர்கள் என்று நிச்சயம் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சரி ரெசிபிகு போலாமா.
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் 1 கப் அளவு ஜவ்வரிசியை போட்டு, பொடி ரவை போல் அரைத்துக் கொள்ளவேண்டும். அதாவது ரவையை விட கொஞ்சம் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். ரொம்பவும் நைசாக அரைத்து விட்டால், லட்டு சுவையாக கிடைக்காது.
அதன் பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் 1/4 கப் அளவு ஊற்றி மிதமான தீயில் காய்ந்து வந்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் ஜவ்வரிசியை கடாயில் கொட்டி, மிதமான தீயில் 10 நிமிடங்கள் போல வறுக்க வேண்டும். வறுத்த ஜவ்வரிசியை எடுத்து வாயில் போட்டு பார்த்தால் நறநறவென கடித்து சாப்பிடும் பக்குவம் வர வேண்டும். அந்த சமயத்தில் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை பொடித்து இவைகளை உங்கள் தேவைக்கு ஏற்ப கடாயில் வறுபட்டு கொண்டிருக்கும் ஜவ்வரிசியில் சேர்த்துக் கொள்ளுங்கள். (உலர் திராட்சையை மட்டும் முழுசாக போட்டுக் கொள்ளுங்கள்.) அதன் பின்பு 3/4 கப் அளவு தேங்காய் துருவலையும் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக வறுத்து விடுங்கள்.
இரண்டு நிமிடங்கள் போல மிதமான தீயிலேயே வதக்கி விட்டு, ஒரு சிட்டிகை அளவு உப்பு தூள் சேர்த்து, 1/4 ஸ்பூன் அளவு ஏலக்காய் பொடி சேர்த்து, நன்றாக கலந்து விட்டு இதை அப்படியே ஒரு பிளேட்டில் மாற்றிக் கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக மிக்ஸி ஜாரில் 1/2 கப் அளவு சர்க்கரையை போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த சர்க்கரையை வறுத்து வைத்திருக்கும் மாவில் கொட்டி, 2 ஸ்பூன் நெய் விட்டு, நன்றாக கலந்து விடவேண்டும். ஜவ்வரிசி மாவும் சர்க்கரையும் ஒன்றாக கலந்த பின்பு 2 லிருந்து 3 டேபிள் ஸ்பூன் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
அதன் பின்பு உங்களுடைய கையை நன்றாக கழுவி விட்டு, ஈரத்தைத் துடைத்துக் கொண்டு கொஞ்சம் நெய்யை கையில் தடவிக் கொண்டு, இந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொஞ்சம் அழுத்தம் கொடுத்து உருட்டினால் அழகான லட்டுகள் தயார் ஆகி இருக்கும். உங்களுக்கு லட்டு சரியாக பிடிக்க வரவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் பாலை சேர்த்து கூட அழுத்தம் கொடுத்து லட்டுவை தயார் செய்து பாருங்கள். சூப்பர் ஜவ்வரிசி லட்டு ரெடி.
இந்த லட்டு வில் நாம் பால் சேர்த்து இருப்பதால் இரண்டு நாட்கள் மட்டும்தான் வெளியில் வைத்து சாப்பிடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜவ்வரிசி – 1 கப், தேங்காய் துருவல் – 3/4 கப், சர்க்கரை – 1/2 கப், நெய் – 1/4 கப். (ஜவ்வரிசி அளந்து எடுத்த அதே கப்பில் மற்ற பொருட்களை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இனிப்பு சுவை கூடுதலாக பிடிக்கும் என்றால் 3/4 கப் சர்க்கரையை எடுத்துக் கொள்ளலாம்.)
பின்குறிப்பு: இந்த லட்டுவில் உங்களுக்கு சர்க்கரை சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கற்கண்டு பொடித்து சேர்த்துக்கொள்ளலாம். நாட்டு சர்க்கரை, பொடித்த வெல்லம் சேர்த்து வேண்டுமென்றாலும் லட்டு தயார் செய்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.