
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் டிபன் என்றால் அது தோசை. அந்த தோசையில் நார்ச்சத்து நிறைந்த இந்த சோளத்தை கலந்து சுட்டு கொடுங்கள். உடலுக்கு தேவையான நார்ச்சத்து முழுவதும் இந்த தோசையில் இருந்தே கிடைத்துவிடும். சோளத்தில் இரண்டுவகை சோளம் உள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய சோளம், வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய சோளம். இந்த இரண்டில் உங்களுக்கு எது கிடைத்தாலும் அதை பயன்படுத்தி இந்த தோசை ரெசிபியை செய்யலாம். சரி செய்முறையை தெரிந்துகொள்வோமா.
இந்த சோள தோசை செய்ய தேவையான பொருட்கள். அரிசி – 1 கப், சோளம் – 1 கப், உளுந்து – 1/2 கப், வெந்தயம் – 1/2 ஸ்பூன், இட்லி அரிசியை எந்த கப்பில் அளந்து எடுத்துக் கொள்கிறார்களோ, மற்ற பொருட்களையும் அதே கப்பில் அளந்து மொத்தமாக ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மூன்று முறை கழுவிக் கொள்ளுங்கள்.
கழுவிய இந்த எல்லாப் பொருட்களையும் நல்ல தண்ணீர் ஊற்றி 5 லிருந்து 6 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊறிய இந்த மாவை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். கிரைண்டரிலும் போட்டு அரைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.
ஆனால் இந்த மாவு தோசை மாவு பதத்திற்கு லேசாக கொரகொரப்பாக இருக்க வேண்டும். இட்லி மாவு அரைப்பது போலவே அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவை ஒரு மூடி போட்டு நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் வரை புளிக்க வைத்தாலே போதும். மாவு நன்றாக புளித்து விடும். சோளம் சேர்த்து அரைத்த மாவு சீக்கிரம் புளித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். (5 மணி நேரத்திற்கு பிறகு மாவை ஃபிரிட்ஜில் எடுத்து வைத்துவிடுங்கள்.)
5 மணி நேரம் புளித்த மாவில், உப்பு போட்டு தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கரைத்து எப்போதும்போல தோசைக்கல்லில் தோசை வார்த்தால் போதும். சோளதோசை அட்டகாசமாக மொறு மொறுன்னு கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தோசையை சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கக் கூடிய ஆரோக்கியமான தோசை இது.
இந்த தோசைக்கு சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி எதை வேண்டுமென்றாலும் நீங்கள் சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். எப்போதும் போல தோசை சுடாமல் வாரத்தில் ஒரு நாள் இப்படி குழந்தைகளுக்கு சத்து உள்ள தோசையை சுட்டு கொடுப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் ட்ரை பண்ணி பாருங்க.