
கார சுவையில் சூப்பரான ஒரு அப்பம் ரெசிபியை தான் என்று பார்க்கப் போகின்றோம். இதற்காக தனியாக மாவெல்லாம் அரைக்க தேவையில்லை. வீட்டில் இருக்கும் கோதுமை மாவு, ரவை இட்லி மாவு இவைகளை வைத்து சூப்பரான இந்த அப்பத்தை செய்து முடிக்கலாம். திடீரென்று வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து விட்டார்கள் அவர்களுக்கு லைட்டா ஸ்னாக்ஸ் கொடுக்கணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணலாம். ஈவினிங் டீ டைம்க்கு கூட இந்த ஸ்நாக்ஸ் ரெடி பண்ணலாம். வாங்க அருமையான இந்த சமையல் குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்.
இந்த எல்லா பொருட்களையும் அளப்பதற்கு ஒரு சிறிய டம்ளர் அல்லது கப் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு ஒரு – 1 கப், ரவை – 1/2 கப், இட்லி மாவு – 1 கப், தண்ணீர் – 1 கப், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கலக்க வேண்டும். கையை வைத்து கலந்தாலும் சரி அல்லது ஒரு கரண்டியை வைத்து கலந்தாலும் சரி. கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளுங்கள். இந்த மாவு ரொம்பவும் திக்காக இருக்கும். மீண்டும் 1/2 கப் தண்ணீர் விட்டு அப்பம் விட மாவை கரைத்துக் கொள்ளுங்கள். மொத்தமாக, நீங்கள் மாவு அளந்த அந்த கப்பிலேயே 1 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றினால் சரியாக இருக்கும். (உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் இருக்கும் இட்லி மாவு தோசை மாவு எது வேண்டும் என்றாலும் அப்பம் செய்ய எடுத்து கொள்ளலாம். லேசாக புளித்த இட்லி மாவை சேர்த்தாலும் தவறு கிடையாது.)
கரைத்து வைத்திருக்கும் இந்த மாவில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 2, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது – 1/2 கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு, சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு நுணுக்கியது – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் போட்டு மீண்டும் நன்றாக மாவை கலந்து விடுங்கள். மாவை அப்படியே மூடி ஐந்து நிமிடம் ஊற வையுங்கள்.
இதற்குள் அந்த ஐந்து நிமிடத்தில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றினால் சூடாகிவிடும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, ஒரு குழி கரண்டியில் கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து எண்ணெயில் விட்டால், அப்பம் கிடைக்கும். ஊற்றிய அப்பம் மெதுவாக மேலே எழும்பி வந்தவுடன், மீண்டும் மற்றொரு அப்பத்தை ஊற்றி திருப்பிப் போட்டு பொன்னிறமாக சிவந்து வந்தவுடன் எடுத்து ருசித்துப் பாருங்கள். அத்தனை அருமையாக இருக்கும்.
சுட சுட சுட்டு கொடுத்துட்டே இருந்தா, வீட்டில் இருக்கிறவங்க சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. இதற்கு தொட்டுக் கொள்ள ஒரு தேங்காய் சட்னி போதும் செம டேஸ்டா இருக்கும். நீங்க வேணும்னா இன்னைக்கு ஈவினிங் டீ குடிக்கும் போது இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படிக்கலாமே: இனி ஆப்பத்திற்கு முதல் நாளே ஊற வைத்து மாவு அரைக்க வேண்டிய அவசியமில்லை. நினைத்த பத்தாவது நிமிடத்தில் ஆப்பம் தயார்.
பின்குறிப்பு: இதை நிறைய எண்ணெயில் ஊற்றி பொரிப்பதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், குழிப்பணியார கல்லில் கூட கொஞ்சமாக எண்ணெய் விட்டு பணியாரம் போல ஊற்றி வேக வைத்து சாப்பிடலாம். நிறைய எண்ணெயில் பொரித்து எடுத்தாலும், நிறைய எண்ணெய் குடிக்காது. இருப்பினும் சில பேருக்கு டீப் ஃப்ரை புடிக்காது. டயட்டில் இருப்பார்கள் அல்லவா அதற்காகத்தான்.