
வீட்டில் நாம் பயன்படுத்தும் பல விஷயங்களில் கெமிக்கல் பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக உணவு விஷயத்தில் கொஞ்சம் கவனமாகவே இருப்போம். இதனால் கடைகளில் உணவை வாங்கி உண்ணாமல் ஆரோக்கியமாக வீட்டில் செய்து உண்போம். இதற்கு காரணம் கடைகளில் வாங்கும் பொருள்களில் கேடு விளைவிக்கும் தன்மை உள்ளது என்பதால் தான்.
அப்படியானால் வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களிலும் கெமிக்கல் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் அல்லவா? மற்ற விஷயங்களில் இதை நாம் கடைப்பிடித்தாலும் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விட் சோப் போன்றவற்றில் இன்றளவும் கெமிக்கல் கலந்த பொருட்களை தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த பொருட்களை கொண்டு பாத்திரங்களை தேய்த்து அதில் நாம் சமைத்து உணவருந்தும் போது கொஞ்சம் பாதிப்பு இருக்க தானே செய்யும்.
அதுமட்டுமின்றி இது போல லிக்விட்களை நாமே கெமிக்கல் இன்றி வீட்டில் தேவையில்லை என தூக்கிப் போடும் பொருட்களை வைத்து தயாரிக்கும் போது செலவும் குறையும். அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அப்படியான ஒரு அருமையான முறையை பற்றய இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த லிக்யூட் தயாரிக்க நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்திய பிறகு தூக்கிப் போடும் புளி வடிகட்டிய திப்பியை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் எலுமிச்சை பழங்களை சாறு பிழிந்த பிறகு அதன் தோலை தூக்கி போடாமல் அதையும் சேகரித்து வைத்துக் கொள்ளுங்களள்.
அடுத்து குக்கரில் நீங்கள் சேகரித்து வைத்த புளி சக்கை ஒரு கைப்பிடி அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் மூன்று எலுமிச்சை பழத்தோல் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் பத்து ரூபாய்க்கு கடையில் பூந்திக்கொட்டை வாங்கி அதையும் இத்துடன் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.
குக்கரின் விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு பூந்திக் கொட்டையில் இருக்கும் கொட்டையை தனியாக எடுத்து விட்டு அதன் சக்கை, புளி சக்கை, எலுமிச்சை பழத்தோல் மூன்றையும் மிச்சியில் சேர்த்து நன்றாக அரைத்த பிறகு அதை வடிகட்டி கொள்ளுங்கள். இத்துடன் இதையெல்லாம் வேக வைக்க பயன்படுத்திய தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது வேக வைத்த தண்ணீர் வடிகட்டிய சாறு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் மஞ்சள் தூள் கலந்து நன்றாக குலுக்கிய பிறகு பாட்டிலில் ஊற்றி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த லிக்விட் உங்களுக்கு ஒரு மாதத்திற்கு பாத்திரம் தேய்க்க போதுமானதாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: 2 நிமிடத்தில் உப்பு கறை படிந்த பாத்ரூம் குழாய்களை பளிச்சின்னு மாத்த சூப்பர் ஐடியா.
இதில் பூந்திக்கொட்டை சேர்த்திருப்பதால் நன்றாக நுரைக்கும். அதில் சேர்க்கும் புளி எலுமிச்சை சாறு மஞ்சள் இவையெல்லாம் நம் உடலுக்கு எந்த வகையிலும் கேடு விளைவிக்காது. அதுமட்டுமின்றி வீணாக கீழே போடும் பொருட்களைக் கொண்டு இதை தயாரித்து இருப்பதால் பணமும் மிச்சமாகும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.