
இரும்பு சத்து குறைபாடு காரணமாக பெண்களுக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ் பிரச்சனை இருக்கும். அதை சரி செய்யவும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி இப்போது உடல் எடையை குறைப்பதில் சிரமங்கள் இருக்கிறது. நீங்க உடற்பயிற்சி செய்றீங்க, உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கீங்க என்றாலும், இந்த குறிப்பை வாரம் ஒரு நாள் முயற்சி செய்யுங்கள். இந்த பாயசம் ரெசிபிக்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் கொள்ளு. கொள்ளு சுண்டல், கொள்ளு ரசம், கொள்ளு சட்னி, கூட நமக்கு தெரியும். ஆனால் கொள்ளு வைத்து பாயாசம் எப்படி செய்வது.
கொள்ளு – 1/2 கப், வெல்லம் – 3/4 கப், தேங்காய் துருவல் – 1/4 கப், இந்த அளவுகளில் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். (இது அல்லாமல் 1/2 டம்ளர் அளவு தண்ணீரில், 1 ஸ்பூன் அளவு அரிசி மாவை போட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து அதை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.)
ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1/2 கப் அளவு கொள்ளு போட்டு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி 7 லிருந்து 8 விசில் விட்டு கொள்ளு சாப்ட் ஆக வேக வைத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த கொள்ளை ஒன்றும் இரண்டுமாக அரைத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்து அரைத்த கொள்ளு ரொம்பவும் கட்டியாக இருந்தால் அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். (மத்து வைத்தும் வேகவைத்த கொள்ளை கடையலாம். மிக்ஸி ஜாரில் போட்டும் ஒன்றும் இரண்டுமாக மசித்து எடுக்கலாம்)
வேக வைத்து கடைந்த கொள்ளை மீண்டும் குக்கரோடு அடுப்பில் வைத்து, தேங்காய் துருவல் 1/4 கப், துருவிய வெல்லம் 3/4 கப், சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இதோடு முதலில் நாம் அரிசி மாவை கொஞ்சமாக தண்ணீரில் போட்டு கரைத்து வைத்திருக்கின்றோம் அல்லவா அதையும் ஊற்றி விடுங்கள். வெல்லத்தின் பச்சை வாடை நீங்க வேண்டும். அரிசி மாவு நன்றாக வேக வேண்டும். அதுவரை இந்த பாயாசத்தை அப்படியே குக்கரில் கொதிக்க வையுங்கள். தேவையான அளவு தண்ணீரை நீங்கள் ஊற்றிக் கொள்ளலாம்.
இதற்குள் இன்னொரு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நெய் விட்டு, முந்திரி உலர் திராட்சை போட்டு வறுத்து இந்த பாயாசத்தில் கொட்டி விடலாம். அப்படி இல்லை என்றால் இந்த நெய்யில் பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதை இந்த பாயாசத்தில் கொட்டி கலந்து சாப்பிட்டாலும் சுவையாக தான் இருக்கும்.
பாயாசத்தின் பச்சை வாடை நீங்கிய உடன் நெய்யில் வறுத்த பொருட்களை பாயாசத்தில் கொட்டி கலந்து சுட சுட பரிமாறினால் சூப்பரான கொள்ளு பாயாசம் தயார். உடல் ஆரோக்கியத்தை நன்றாக மேம்படுத்தும் கொள்ளை வைத்து ஒருமுறை இப்படி ஒரு பாயாசத்தை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் வேண்டாம் என்று சொல்லாமல் விருப்பமாக சாப்பிடுவார்கள்.