
தீபாவளி என்றதும் சிறு குழந்தைகளுக்கு இனிப்புகளும் பட்டாசுகளும் புது ஆடைகளுமே முதலில் தோன்றும். பெரியவர்களுக்கோ பலகாரம் செய்வது வழிபாடு செய்வது போன்றவை தோன்றும். அப்படி தீபாவளி அன்று செய்யக்கூடிய வழிபாட்டில் மிகவும் முக்கியமான ஒரு வழிபாடாக திகழ்வதுதான் லட்சுமி பூஜை. வடநாட்டை சேர்ந்தவர்கள் பலரும் தாங்கள் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு ஒவ்வொரு வருடம் வரக்கூடிய தீபாவளி நாளிலும் தீபாவளி ஒட்டி வரக்கூடிய ஐப்பசி அமாவாசை நாளிலும் லட்சுமி பூஜையை மேற்கொள்வார்கள். இது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட லட்சுமி பூஜையை செய்ய இயலாதவர்கள் கூட செல்வ வளத்துடன் வாழ்வதற்கு சொல்ல வேண்டிய லட்சுமி குபேர மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகாலட்சுமி பூஜையை செய்வதற்கும் மகாலட்சுமி வழிபாடு செய்வதற்கும் மிகவும் உகந்த நாட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய தீபாவளி திருநாள் மற்றும் அதை ஒட்டி வரக்கூடிய ஐப்பசி அமாவாசை. இந்த நாளில் யார் ஒருவர் மகாலட்சுமி தாயாரை நினைத்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு பதினாறு செல்வங்களும் கிடைக்க பெற்று சிறப்புடன் வாழ்வார்கள் என்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அதை இன்றளவும் வடமாநிலத்தை சேர்ந்த அனைவரும் பின்பற்றிக் கொண்டுதான் வருகிறார்கள். அதிலும் குறிப்பாக மார்வாடிகள். நாமும் அவர்களைப் போலவே செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு செய்ய வேண்டிய எளிமையான மந்திர வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
தீபாவளி அன்று பலரும் அசைவத்தை சாப்பிட்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதனால் வழிபாடு செய்வதை தவிர்த்துக் கொள்வார்கள். ஆனால் இந்த மந்திர வழிபாட்டை செய்வதற்கு நமக்கு எந்தவித தடையும் கிடையாது. மேலும் பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த மந்திர வழிபாட்டை மேற்கொள்ளலாம். வயதானவர்களும் சரி சிறுவயதை சேர்ந்தவர்களும் சரி இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். வீட்டு பூஜை அறையில் அமர்ந்து தான் செய்ய வேண்டும் என்று நிபந்தனை கிடையாது. வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து எந்தவித சிந்தனையும் இல்லாமல் ஒரு மனப்பட்டு இந்த மந்திர வழிபாட்டை செய்ய வேண்டும்.
இந்த மந்திர வழிபாட்டை அக்டோபர் மாதம் 20ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிக்குள்ளும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி விடியற்காலை 4 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள்ளும் செய்ய வேண்டும். இந்த இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்து இந்த மந்திர வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த மந்திர வழிபாட்டை செய்வதற்கு முன்பாக கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து கொண்டு முழு மனதோடு லட்சுமி குபேரரை நினைத்து 16 செல்வங்களும் நிலையாக நிலைத்திருக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து பிறகு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை நிறுத்தி நிதானத்துடன் தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் கூறி முடித்துவிட்டு திரும்பவும் லட்சுமி குபேரரை மனதார நினைத்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
” ஸ்ரீம் சௌபாக்கிய லட்சுமி குபேராய நமஹ “
இதையும் படிக்கலாமே: தீபாவளி அன்று பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு
முழு மனதோடு ஆத்மார்த்தமாக லட்சுமி குபேரரை நினைத்து தீபாவளி அன்றோ அதற்கு மறுநாளோ இந்த மந்திரத்தை கூறுபவர்களுக்கு லட்சுமி குபேரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.