
பணம் அதிகம் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் அதனை வீண் விரயம் இல்லாமல் முதலில் பாதுகாக்க வேண்டும். அதாவது செலவுகளை குறைப்பது, மகாலட்சுமிக்கு ரொம்பவும் பிடித்தமான செயலாகும். தாம்தூம் என்று செலவு செய்பவர்கள் இடத்தில் மகாலட்சுமி அதிக காலம் தங்குவதில்லை! மாறாக அந்த செலவு, இயலாதவர்களுக்கு தானமாக செய்தால் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம். விரயம் இல்லாத, பணவரவு அதிகரிக்கக் கூடிய மகாலட்சுமி அருள் தரும் ஸ்லோகம் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
மகாலட்சுமி சுலோகம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் சௌம் ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி நமஹ:
இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் நீராடிய பிறகு, தூய மனதுடன், அமைதியான இடத்தில் அல்லது பூஜை அறையில் அமர்ந்து 108 முறை உச்சரித்து வந்தால், மகாலட்சுமியின் அருள் கிடைத்து, பணவரவு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அது மட்டும் அல்லாமல் வீணாக வரக்கூடிய செலவுகளையும் தவிர்க்கலாம். ஸ்லோகம் ஜெபிக்கும் போது, மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை அல்லது சிலையை வாசம் மிகுந்த மலர்களால் அலங்கரித்து வைக்க வேண்டும்.
மகாலட்சுமிக்கு மல்லிகை மணம் ரொம்பவும் விருப்பமானது. தாமரை மலர்களை கொண்டு மகாலட்சுமியின் திருவடிகளை அலங்கரிக்க, சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். அதுமட்டுமல்லாமல் மகாலட்சுமிக்கு இனிப்பு என்றால் ரொம்பவும் பிடிக்கும். இனிப்பு மிகுந்த சர்க்கரை பொங்கல் அல்லது இனிப்பு நிறைந்த கற்கண்டு வைத்து நைவேத்தியம் படையுங்கள். பக்தி சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் ஜெபிப்பது நல்ல பலனைத் தரும். இரண்டு புறங்களிலும், ஐந்து முகம் கொண்ட குத்து விளக்குகளை ஏற்றி, அதில் ஐந்து முகங்களிலும், பஞ்சு திரியிட்டு, நெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய் விட்டு, தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
மகாலட்சுமிக்கு ரொம்பவும் வேண்டியது துளசி தீர்த்தம். விஷ்ணுவின் அருள் கொடுக்கும் துளசி இலைகளை, தீர்த்த நீரில் சேர்த்து அதனுடன் கொஞ்சம் ஏலக்காய், பச்சை கற்பூரம் போன்றவற்றையும் தூவுங்கள். இப்படி மகாலட்சுமியை அலங்கரித்த பிறகு, வெள்ளிக்கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை மேலே சொன்னபடி ஜெபிப்பது மிகவும் விசேஷமானது. பத்மாசனத்தில் அல்லது சாதாரணமாக கால்களை மடித்து வைத்து தியான நிலையில் அமர்ந்து 108 அல்லது 1008 முறை இந்த மகாலட்சுமியின் சக்தி வாய்ந்த ஸ்லோகத்தை தினமும் உச்சரிக்க வேண்டும். தினமும் முடியாதவர்கள், வெள்ளிக்கிழமையில் மட்டும் இப்படி செய்யலாம்.
இதையும் படிக்கலாமே:
வடசேரி கிருஷ்ணன் கோவில் வரலாறு
இம்மந்திரத்தின் அதிர்வலைகள், தெய்வீக சக்தியை ஈர்க்கக்கூடியது. மகாலட்சுமியின் அனுக்கிரகம் பெற, இம்மந்திரத்தை பிழை இல்லாமல் நேர்த்தியாக உச்சரிக்க பழகுங்கள். மகாலட்சுமியின் இந்த சக்தி வாய்ந்த பீஜ மந்திரம் சரியான உச்சரிப்பு இல்லாமல், பிழையோடு உச்சரித்தால், எதிர் விளைவுகள் ஏற்படும். முதலில் பயிற்சி செய்த பிறகு பின்னர் பூஜை அறையில் தியான நிலையில் அமர்ந்து சரீர மற்றும் மன சுத்தத்தோடு வேண்டினால், நிச்சயம் பொருளாதார ரீதியாக சிறந்த முன்னேற்றம் அடையலாம். தொழில் வளர்ச்சி பெறவும், பொருள்கள் ஈட்டவும் இந்த மந்திரத்தை உச்சரித்து, மகாலட்சுமியின் அருளோடு வேண்டிய வரங்களை பெறலாம்.