
மார்கழி திங்கள், மதி நிறைந்த நன்னாளாம் என்ற பாடல் வரிகளுக்கு இணங்க, இந்த வருட மார்கழி மாதம் திங்கட்கிழமையே பிறக்கப் போகின்றது. அப்போது இந்த நாளுக்கு எத்தனை சிறப்பு என்பதை நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். நாளைய தினம் மார்கழி முதல் தேதி. நாளை தொடங்கி 30 நாட்களும் ஒரு வேண்டுதலை இறைவனின் பாதங்களில் வைத்து, நம்பிக்கையோடு வேண்டிக் கொண்டால் அந்த வேண்டுதல் நிச்சயம் கூடிய விரைவில் பலிக்கும்.
சில பேருக்கு மார்கழி மாதம் முடிவதற்குள்ளையே அந்த வேண்டுதல் நிறைவேற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. காரணம் மார்கழி மாதம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் இலட்சம் மடங்கு பலன் அதிகம். உதாரணத்திற்கு நிலை வாசலில் ஒரு நாள் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால், ஒரு வருடம் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்த புண்ணியம் கிடைக்கும்.
இந்த மார்கழி மாதத்தில் ஒருவருக்கு அன்னதானம் செய்தால், ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும். மார்கழி மாதத்தில் ஒரே ஒரு நாள் கோவிலில் இருக்கும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் தானமாக வழங்கினால், லட்சம் முறை அந்த இறைவனுக்காக அபிஷேகம் செய்த பலனை நீங்கள் பெறுவீர்கள். அத்தனை சிறப்பு வாய்ந்த மாதம் தான் இந்த மார்கழி மாதம்.
பெருமாள் கோவில், சிவன் கோவில், வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் என்று, எந்த கோவில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கிறதோ, அந்த கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மார்கழி மாதம் முழுவதும் பிரம்ம முகூர்த்த நேரத்தில், கண்விழித்து வாசலை கூட்டி கோலம் போட்டு, நிலை வாசல் படியில் இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
அந்த விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றலாம். உங்களுக்கு வாழ்க்கையில் ரொம்பவும் பணக்கஷ்டம் இருக்கிறது எனும் பட்சத்தில், அந்த இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றுவது சிறப்பு. தாமரை தண்டில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். இந்த மார்கழி 30 நாளும் தாமரை தண்டு திரி போட்டு நிலை வாசலில் விளக்கு ஏற்றுபவர்கள் வாழ்க்கையில் பண கஷ்டம் என்பது இருக்காது.
இன்னும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் அந்த எண்ணெயில் தினமும் 2 ஏலக்காய், 2 கிராம்பு, கொஞ்சம் பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டு தீபம் ஏற்றுங்கள். நிலை வாசலில் வாசம் நிறைந்த சாம்பிராணி வத்திகளை ஏற்றி வையுங்கள். உங்கள் வீடு பார்ப்பதற்கு அப்படியே ரம்யமாக இருக்க வேண்டும். காலையில் மகாலட்சுமி வீதியில் வலம் வரும்போது, வேறு எந்த வீட்டிற்கும் போகணும் என்ற எண்ணமே அவர்களுக்கு வரக்கூடாது.
உங்கள் வீட்டை பார்த்தவுடன் அப்படியே உங்கள் வீட்டிற்குள் நுழைந்து விட வேண்டும். அதற்காக மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை அடுத்தவர்கள் மீது படக்கூடாது என்று எண்ணுவது தவறு. இருந்தாலும் பணம் விஷயத்தில் நாம் எப்போதுமே சுயநலமாக சிந்திப்போமே. இந்த தீபம் எவர் ஒருவர் வீட்டில் மார்கழி மாதம் முழுவதும் காலை, சூரிய உதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றப்படுகிறதோ, அந்த வீட்டில் ஐஸ்வர்யத்திற்கு ஒரு துளியும் குறை இருக்காது.
இதையும் படிக்கலாமே: சிறப்பான வாழ்க்கை அமைய மார்கழி மாதம் செய்ய வேண்டிய செயல்கள்
இது நிதர்சனமான உண்மை. மார்கழி மாதம் ஒரு நாள் நிலை வாசலில் தீபம் ஏற்றினால் ஒரு லட்சம் நாட்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பலனை அடைய முடியும் என்றால், மார்கழி மாதம் 30 நாளும் நீங்கள் தீபம் ஏற்றினால் உங்கள் வாழ்நாளில் கிடைக்காத புண்ணியம் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும். அதேபோல இந்த மார்கழி மாதத்தில் உங்களால் முடிந்த வரை அடுத்தவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள் குடும்பம் சுபிட்சம் அடையும் என்று இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.