
பலவிதமான ஸ்நாக்ஸ்கள் கடைகளில் விற்கப்பட்டாலும் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா மட்டும் தான். வெங்காயத்துடன் கடலை மாவு சேர்த்து செய்யப்படும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். இதனை வீடுகளிலும் பலர் விதவிதமா சுவையில் செய்து சாப்பிடுவதுண்டு. ஒரு சிலர் கடலை மாவுட, கோதுமை மாவில் கூட பக்கோடா செய்வார்கள். அதேபோல் உடம்புக்கு ஆரோக்கியம் தரும் ராகி மிகவும் பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் நன்மையாக இருக்கும். குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் அப்படி சுவையான இந்த ராகி பக்கோடாவை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – ஒரு கப், பொட்டுக்கடலை மாவு – 2 ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, காய்ந்த மிளகாய் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.
செய்முறை:
முதலில் ஒரு வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் கால் ஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் தனி மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இதனுடன் ஒரு கப் கேழ்வரகு மாவு மற்றும் இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கிளறிவிட வேண்டும்.
பிறகு இவற்றுடன் தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பக்கோடா போடும் மாவு பதத்திற்கு பிசைந்து கொடுக்க வேண்டும். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் 250 கிராம் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, உதிரி உதிரியாக எண்ணெயில் சேர்க்க வேண்டும். சிறிது நேரத்தில் இவை நுரை பொங்க கொதிக்க ஆரம்பிக்கும். அப்பொழுது கரண்டி வைத்து லேசாக கலந்து விட வேண்டும். அதன் பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு ஐந்து நிமிடத்திற்கு நன்றாக வேக வைத்தால் சுவையான பக்கோடா தயாராகிவிடும். இதனை சுட சுட குழந்தைகளுக்கு பரிமாறி கொடுத்துப் பாருங்கள். அவ்வளவு விருப்பமாக சாப்பிடுவார்கள்.