- Advertisement -
சமையல் குறிப்புகள்

முளைகட்டிய கொள்ளு கிரேவி செய்முறை

நம்முடைய முன்னோர்கள் அவர்களுடைய காலத்தில் பயறு வகைகளை அதிக அளவில் சேர்த்துக் கொண்டார்கள். அதிலும் குறிப்பாக பயறுகளை அப்படியே சேர்க்காமல் அதை முளைகட்டி பிறகு சேர்த்துக் கொண்டார்கள். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சாதாரண பயறை சாப்பிடுவதை விட முளைகட்டிய பயறை சாப்பிடுவதில் அதிக அளவு சத்துக்கள் மிகுந்திருக்கிறது என்பதுதான். அதனால்தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அந்த வகையில் கொள்ளை முளைகட்டி செய்யக்கூடிய கிரேவியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

கொள்ளை சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்துவார்கள். இதில் விட்டமின்கள், புரதச்சத்துக்கள், இரும்புச்சத்து போன்ற அனைத்தும் இருக்கிறது. கடினமான உழைக்கும் நபர்கள் கொள்ளை சாப்பிடுவதன் மூலம் அவர்களுடைய உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். மேலும் தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கும் இது உதவுகிறது. கொள்ளை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் விரைவிலேயே உடல் எடை குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுநீரக கற்களை கரைக்கிறது. விந்து அணுக்கள் அதிகரிக்கிறது, சர்க்கரை நோயை தடுக்கிறது. மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது. இப்படி நாம் பல பலன்களை கூறிக் கொண்டே செல்லலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • முளைகட்டிய கொள்ளு – ஒரு கப்
  • எண்ணெய் – ஒரு குழி கரண்டி
  • வெங்காயம் – 4
  • தக்காளி – 2
  • தயிர் – 3 டேபிள்ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • பட்டை – 3
  • ஏலக்காய் – 1
  • சோம்பு – 1/2 ஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிது
  • கொத்தமல்லி – சிறிது
  • பிரியாணி இலை – 2
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 1/2 ஸ்பூன்
  • தனியாத்தூள் – 3 ஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கொள்ளை சுத்தம் செய்து 10 மணி நேரம் ஊற வைத்து பிறகு அதை முளைகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை அரைத்து விழுதாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் தக்காளியையும் அரைத்து விழுதாக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை இவற்றை சேர்க்க வேண்டும். சோம்பு சிவந்ததும் கருவேப்பிலையை சேர்த்து கறிவேப்பிலை பொரிந்ததும் வெங்காய விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காய விழுதின் பச்சை வாடை நீங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்க வேண்டும். இந்த இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாடையும் நீங்கிய பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

இவை மூன்றின் பச்சை வாடையும் நீங்கி நன்றாக ஒன்றோடு ஒன்று கலந்த பிறகு இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு இதில் தயிரை சேர்க்க வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக்கொண்டு நன்றாக கிளறி விடுங்கள். இப்பொழுது இந்த மசாலா அனைத்தும் நன்றாக பச்சை வாடை நீங்கிய பிறகு முளைகட்டி வைத்திருக்கும் கொள்ளை இதில் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்ததாக இதற்கு தேவையான அளவு உப்பை சேர்த்து விட்டு சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையையும் தூவி கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். கடைசியாக கரம் மசாலாவை சேர்த்து குக்கர் மூடியை மூடி பத்து விசில் வரும் வரை அடுப்பிலேயே மிதமான தீயில் வைத்திருக்க வேண்டும். பத்து விசில் வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி குக்கரை திறந்தால் சுவையான முளைகட்டிய கொள்ளு கிரேவி தயாராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சாலியா விதை பாயாசம் செய்முறை

பல அற்புதமான சத்துக்கள் நிறைந்த கொள்ளை துவையலாகவோ சூப்பாகவோ செய்து தருவதற்கு பதிலாக இந்த முறையில் முளைகட்டி கிரேவியாக செய்து தருவதன் மூலம் இட்லி, தோசை சப்பாத்தி என்று அனைத்திற்கும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.

- Advertisement -