- Advertisement -

வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே அனைவரும் தங்கள் இல்லத்திற்கு அதிகமாக வாங்கக்கூடிய பழ வகைகளில் ஒன்றாக திகழ்வதுதான் முலாம் பழம். முலாம் பழத்தை வைத்து ஜூஸ் செய்து சாப்பிடுவார்கள் அல்லது அப்படியே சர்க்கரையை தூவி சாப்பிடுவார்கள். இப்படி ஒரே மாதிரி சாப்பிடுவதற்கு பதிலாக கொஞ்சம் வித்தியாசமாக முலாம் பழத்தில் கேசரி செய்வது எப்படி என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முலாம்பழம் குளிர்ச்சி பண்புகளை கொண்டுள்ளது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை அகற்றுகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் விட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. எடை இழப்பிற்கும் உதவி புரிகிறது. விட்டமின் ஏ இருப்பதால் கண் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • தண்ணீர் – 1 1/2 கப்
  • முலாம் ஜூஸ் – 1 கப்
  • ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
  • ரவை – 1 கப்
  • சர்க்கரை – 1 1/2 கப்
  • நெய் – 3 ஸ்பூன்
  • பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் – விருப்பத்திற்கு ஏற்ப
  • உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் கொதிப்பதற்குள் ஒரு முலாம் பழத்தை எடுத்து அதன் விதைகளை நீக்கிவிட்டு தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் அரைத்து ஒரு கப் அளவிற்கு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் விருப்பம் இருப்பவர்கள் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு அரைத்து வைத்திருக்க முலாம் பழ ஜூஸையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக கலந்து விட்டு கொதிக்க விட வேண்டும். இப்பொழுது மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ரவையை சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு நெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தண்ணீரும் முலாம்பழச் சாறும் நன்றாக கொதிக்க ஆரம்பித்த பிறகு ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி விடாத அளவிற்கு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ரவை வேகும் வரை அப்படியே பொறுமையாக கலந்து கொண்டு இருக்க வேண்டும். ரவை நன்றாக வெந்த பிறகு அதில் உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து விட்டு சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

சர்க்கரை அனைத்தும் கரைந்து கெட்டியான பதத்திற்கு வரும் பொழுது ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து அதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி விருப்பத்திற்கு ஏற்றார் போல் முந்திரி, பாதாம், கிஸ்மிசை போட்டு வறுத்து அதை நெய்யுடன் அப்படியே கேசரியில் சேர்த்து விட வேண்டும். கேசரியை நன்றாக கிளறிவிட்டு இறக்கி விட வேண்டும்.

- Advertisement -

இதில் எந்தவித எசன்ஸையும் சேர்க்கக்கூடாது. அப்படி சேர்த்தால் முலாம்பழத்தின் சுவை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. முலாம்பழ சுவையில் அருமையான கேசரி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: குல்பி ஐஸ் செய்யும் முறை

ஒரு பொருளை எப்போதும் போல் செய்வதை விட வித்தியாசமாக ஏதாவது ஒன்றை செய்து தருவதன் மூலம் செய்பவர்களுக்கும் சாப்பிடுபவர்களுக்கும் ஆசையாக இருக்கும்.

- Advertisement -