- Advertisement -
சமையல் குறிப்புகள்

தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை செய்முறை

- Advertisement -

சமையல் என்பது மிகவும் அற்புதமான ஒரு கலை. இது ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றார் போல் மாறுபடும். அதேபோல் ஒவ்வொரு ஊருக்கும் சிறப்பான உணவுகள் என்று இருக்கும். பாரம்பரியமான உணவுகள் என்றும் இருக்கும். அதை நினைவூட்டும் வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை செய்யும் முறையைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

திருநெல்வேலி அல்வா, பழனி பஞ்சாமிர்தம், மதுரை பருத்திப்பால், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இந்த வரிசையில் தஞ்சாவூரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக திகழக்கூடியது தான் ஒரப்படை. இது அடை வகையை சார்ந்தது. இதில் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். இந்த முறையில் நாம் வீட்டில் அடை செய்து கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – 1 கப்
  • இட்லி அரிசி – 1 கப்
  • கருப்பு உளுந்து – 1 கப்
  • கடலைப்பருப்பு – 1 கப்
  • துவரம் பருப்பு – 1 கப்
  • காய்ந்த மிளகாய் – 12
  • உப்பு – தேவையான அளவு
  • இஞ்சி – 1 1/2 இன்ச்
  • பெருங்காயம் – 1/4 ஸ்பூன்
  • கருவேப்பிலை – 2 கைப்பிடி
  • கொத்தமல்லி – 1 1/2கைப்பிடி
  • சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி
  • தேங்காய் துருவல் – 2 கைப்பிடி
  • சோம்புத்தூள் – 1/2 ஸ்பூன்
  • மரவள்ளி கிழங்கு – 1 கைப்பிடி

செய்முறை

முதலில் பச்சரிசியையும் இட்லி அரிசியையும் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கருப்பு உளுந்தை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பையும் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கிரைண்டரில் போட்டு இட்லி ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் காய்ந்த மிளகாய், உப்பு, இஞ்சி போன்றவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். தயார் செய்து வைத்திருக்கும் மாவில் அரைத்த காய்ந்த மிளகாயை சேர்க்க வேண்டும். பிறகு பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், சோம்புத்தூள், துருவிய மரவள்ளி கிழங்கு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு அகலமான அடிகனமான கடாயை வைக்க வேண்டும். அதில் லேசாக எண்ணெயை ஊற்றி கடாய் காய்ந்ததும் இந்த அடை மாவை அதில் ஊற்ற வேண்டும். பிறகு அதை சுற்றி எண்ணெய் ஊற்றி நன்றாக சிவக்கும் அளவிற்கு வேக விட வேண்டும். பிறகு ஜல்லிக் கரண்டியை வைத்து அடையை திருப்பிப்போட்டு மறுபடியும் எண்ணெய் ஊற்றி வேக வைக்க வேண்டும். இரண்டு புறமும் சிவந்த பிறகு அதை எடுத்து தட்டில் வைத்து பரிமாறலாம். சுவையான தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: சர்க்கரைவள்ளி கிழங்கு அப்பம் செய்முறை

மறந்து போன பாரம்பரிய உணவுகளை இந்த வகையில் ஞாபகப்படுத்தி மாதத்திற்கு ஒரு முறையாவது ஆரோக்கியமான உணவை செய்து கொடுக்கலாம்.

- Advertisement -