
பச்சைப்பயிறு உடம்புக்கு எவ்வளவு நல்லது என்று சொல்லி அதை சுண்டல் செய்து கொடுத்தாலும் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடவே மாட்டாங்க. அதே பச்சை பயிரை வைத்து இப்படி வடை சுட்டுக்கொடுத்து பாருங்க. தட்டில் ஒரு வடை கூட மிச்சம் இருக்காது. அந்த அளவுக்கு மொறு மொறுன்னு ருசியா இருக்கக்கூடிய இந்த வடையை டீ கூட பரிமாறலாம். ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருப்பவர்கள் பதிவை முழுமையாக படித்து பலன் பெறுங்கள்.
முதலில் 1 கப் அளவு பச்சைப்பயிறு எடுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். வடை செய்வதற்கு 5 மணி நேரத்துக்கு முன்பே இதை ஊற வைத்து விட வேண்டும். பச்சைப்பயிரை ஊற வைத்து விட்டால் இந்த வடை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி தான்.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பச்சை மிளகாய் 3, தோல் உரித்த பூண்டு பல் 4, இஞ்சி துண்டு தோல் சீவியது 2 இன்ச், சீரகம் 1 ஸ்பூன், போட்டு இதை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 கைப்பிடி அளவு, தேவையான அளவு உப்பு, ஊறவைத்த பச்சைபயிரை போட்டு மீண்டும் இரண்டு ஓட்டு ஓட்டி எல்லா பொருட்களையும் கொரகொரப்பாக அரைத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள்.
நமக்கு தேவையான மாவு தயாராகிவிட்டது. சில சமயம் இது கொஞ்சம் தண்ணீர் விட்டுப் போகும். எடுத்து வடையை தட்டி விட முடியாது. சில சமயம் மாவின் பக்குவம் சரியாக இருக்கும். உங்களுக்கு வடைமாவின் பக்குவம் கொஞ்சம் நீர்த்து விட்டால் அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலைமாவு அல்லது அரிசி மாவு சேர்த்து மீண்டும் ஒருமுறை பிசைந்து மாவை எடுத்து மசால்வடை போல தட்டி அப்படியே எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டியது தான்.
தேவைப்பட்டால் மாவில் வாசத்திற்காக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் ருசியாக இருக்கும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து வடையை பொறித்து எடுப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி நன்றாக சூடு செய்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு வடையை தட்டி போட்டு மொறுமொறுப்பாக சிவக்க விட்டு எடுத்து விடுங்கள். அவ்வளவுதான். டீ கூட நான்கு வடை கொடுத்தால் கூட உள்ளே இறங்கிவிடும். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான உணவு வயிற்றுக்குள் சென்றது போல நமக்கு ஒரு மனதிருப்தி ஏற்படும்.
வாரத்தில் ஒரு நாளாவது கட்டாயம் இந்த வடையை சுட்டு குழந்தைகளுக்கு கொடுங்க. இதே போல இந்த பச்சை பயிரை ஊறவைத்து முளைகட்டி, முளைகட்டிய பச்சை பயிரில் மேல் சொன்ன குறிப்பை பின்பற்றி வடை செய்தால் அதில் இன்னும் புரோட்டின் சத்து அதிக அளவில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். குழந்தைகள் ஆரோக்கியத்தில் சிரமம் பாக்காதீங்க.