
பல வீடுகளில் நான்கு, ஐந்து காய்களை தவிர மற்ற காய்கறிகளை சமைத்து இருக்கவே மாட்டார்கள் காய்கறி என்று சொன்னால் அனைத்து விதமான காய்கறிவகைகளிலுமமே உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே எந்த ஒரு காய்கறியையும் ஒதுக்குவது என்பது கூடாது. அவ்வாறு இந்த வெண்பூசணி காயையும் சமையலில் பயன்படுத்தலாம் என்பதே பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த வெண் பூசணியை வைத்து சாம்பார், கூட்டு, பொரியல், அல்வா போன்ற பலவித உணவுகளை சமைக்கலாம். இதில் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்து அதிகமாக இருக்கிறது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தை வெகுவாக குறைக்க முடிகிறது. வாருங்கள் இந்த வெண்பூசணி வைத்து செய்யக்கூடிய பாசிப்பருப்புகூட்டடை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
வெண்பூசணி – 1, பாசிப்பருப்பு – கால் கப், பெரிய வெங்காயம் – 1, சிறிய தக்காளி – 1, பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 3 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பூண்டு – ஐந்து பல், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் கால் கப் பாசிப் பருப்பை நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். பாசிப்பருப்பு நன்றாக வெந்ததும் அதனை கரண்டி வைத்து லேசாக கடைந்து கொள்ள வேண்டும்.
பிறகு பூசணிக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஐந்து பல் பூண்டை லேசாக தட்டி இவற்றுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு, அதனுடன் நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய் களையும் சேர்த்து அடுப்பை சிறிய தீயில் வைத்து வதக்கிக் கொள்ளவேண்டும். இவை லேசாக வதங்கியதும் இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
பின்னர் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு தட்டு போட்டு மூடி 5 நிமிடம் வேக வைக்க வேண்டும் இவை நன்றாக வெந்ததும் இவற்றுடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பைசேர்த்தது ஒரு கொதி வரும் வரை நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பாசிப்பருப்பு வெண் பூசணி கூட்டு தயாராகிவிட்டது. சுட சுட சாதத்துடன் சேர்த்து ஒருமுறை சாப்பிட்டு பாருங்கள். பின்னர் அடிக்கடி உங்கள் வீட்டில் இந்தக் கூட்டை செய்து சாப்பிடுவீர்கள்.