
சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கோவிலை பற்றிய வரலாற்றை கேட்டால் மெய்சிலிர்க்கும் வண்ணம் இருக்கும். இந்த ஸ்தலம் முக்தி ஸ்தலமாக விளங்குகிறது. காசியைப் போலவே மீண்டும் பிறவாமை கொடுக்கக் கூடிய மாபெரும் விசித்திரமான வரலாற்றை கொண்டுள்ள இக்கோவிலுக்கு சாவதற்குள் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்று தோன்ற வைக்கிறது. பிறவாமை அருளும் முக்தி ஸ்தலம் பற்றிய வரலாற்றை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் அறிவோம் வாருங்கள்.
கோவை மாநகரை ஒட்டி அமைந்துள்ள பேரூர் பட்டீஸ்வரம் திருக்கோவில் வரலாற்றைத் தான் பார்க்க இருக்கிறோம். மிகவும் தொன்மை வாய்ந்த இந்த கோவிலில் கரிகால சோழனால் கர்ப்ப கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து ஆறாம் நூற்றாண்டில் அப்பர் இந்த கோவிலை புகழ்ந்து பாடியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் வைணவ ஆலயம் ஒன்றை அங்கே நிறுவியுள்ளார். ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இங்கு வந்து பாடியதாக தேவார பாடல்கள் கூறுகிறது.
இவ்வளவு பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் பல அதிசயங்களும் நிறைந்து காணப்படுகிறது. முக்தி ஸ்தலமாக இருக்கும் இக்கோவில், அதை நிரூபிக்கும் வண்ணம் பல அற்புத விஷயங்கள் கொண்டு விளங்குகிறது. இங்கு ஸ்தல விருட்சமாக இறவாப் பனையும், பிறவாப் புளியும் கம்பீரமாக காட்சி தருகிறது.
இறவா பனை:
ஒற்றை பனைமரம் ஒன்று எப்போதும் இளமையாக கம்பீரமாக அங்கு இருந்து வருகிறது. எத்தனை வயது இதற்கு என்பது யாருக்கும் தெரியாது. இதற்கு இறப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது. முக்தி ஸ்தலம் என்பதால் இந்த பனை மரத்துக்கு மட்டும் இறப்பே இல்லை என்பதை நிரூபிக்கிறது. பிறப்பும், இறப்பும் இல்லாத இறைநிலையை இது உணர்த்துகிறது.
பிறவா புளி:
பல ஆண்டு தொன்மை வாய்ந்த புளிய மரம் ஒன்றும், அதனை நிரூபிக்கும் வண்ணம் காட்சி தருகிறது. எல்லா புளிய மரத்தின் விதைகளையும் விதைத்து ஊன்றினால், மீண்டும் முளைக்கும். ஆனால் இந்த புளிய மரத்தில் இருக்கும் விதைகளை கொண்டு போய் நீங்கள் எங்கு ஊன்றினாலும் அது முளைப்பதில்லை! அப்படியே முளைத்தாலும், அது தீய்ந்து போய்விடுகிறது. மீண்டும் பிறவா நிலையை நான் தருவேன் என்பதை உணர்த்தும் வண்ணம் இந்த புளிய மரம் அங்கு இருப்பது அதிசயம் தானே!
இங்கு மாடுகள் சாணம் போட்டால் எத்தனை நாட்கள் ஆனாலும் அதில் புழுக்கள் வராது. இதுவும் இங்கு நடக்கும் ஒரு அதிசயங்களில் ஒன்று. பொதுவாக சாணம் போட்டவுடன் ஓரிரு நாளில் புழுக்கள் வர ஆரம்பித்து விடும். ஆனால் இந்த கோவிலில் மட்டும் சாணம் புழுப்பதில்லை. இந்த புழுக்கா சாணமும் முக்தி ஸ்தலம் என்பதை எடுத்துரைக்கிறது. தீர்த்த குளத்தில் செப்பு காசுகள் புழங்கிய காலத்தில் காசை போட்டு குளிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதனை தூர் வாரும் பொழுது செப்பு பொருட்கள் தங்கம் போல ஒளிர்ந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிக்கலாமே:
கண் திருஷ்டி விலக குளிக்கும் முறை
மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட பல அதிசயங்களை நிகழ்த்தும் இந்த கோவிலில் உள்ள தீர்த்தத்தில் குளித்தால், பைத்தியம் குணமாகுமாம். மன ரீதியான பாதிப்புகளுக்கு இங்கு சென்று பலன் அடையலாம். இங்கு இறப்பவர்களுக்கு வலது செவி மேலாக இருப்பதை கண்டு வியப்பவர்களும் உண்டு. இதனால் மனிதன் இங்கு இறக்கும் தருவாயில், கடவுள் உபதேசம் செய்து தன்னிடம் எடுத்துக் கொள்கிறார் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இன்னும் பல அதிசயங்களை கொண்டுள்ள இக்கோவிலுக்கு ஒரு முறையாவது சென்று முக்தி அடையுங்கள்.