
குழந்தைகளுக்குப் ஸ்வீட் பிடிக்கும் என்றால் அதை நாம் கடையிலிருந்து வாங்கி கொடுப்போம். ஆனால் அது அவர்களுடைய உடலுக்கு ஆரோக்கியம் கொடுப்பதாக இல்லை. நம்முடைய வீட்டிலேயேபொட்டுக் கடலையையும் வெல்லத்தையும் வைத்து அற்புதமான ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு ஸ்வீட்டை சட்டென பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இந்த ஸ்வீட் செய்ய தேவையான பொருட்களை முதலில் நாம் பார்த்து விடுவோம். 1 கப் பொட்டுக்கடலை, 1 கப் பொடித்த வெல்லம், 1 கப் தண்ணீர், 4 டேபிள் ஸ்பூன் நெய், 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி. எந்த கப்பில் பொட்டுக்கடலையை அளக்கிறீர்களோ, அதே கப்பில் வெல்லத்தையும் தண்ணீரையும் அளந்து எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும். ஒரு வேளை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இனிப்பு கொஞ்சம் கூடுதலாக பிடிக்குமென்றால் 1 1/4 கப் அளவு வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.
முதலில் அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து தயாராக வைத்திருக்கும் பொட்டுக்கடலையை அதில் போட்டு மிதமான தீயில் 3 நிமிடங்கள் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பொட்டுக்கடலை நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.
அடுத்தபடியாக ஒரு கடாயில் 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி, 1 கப் வெல்லத்தை சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கரைத்து, இந்த வெல்லக் கரைசலை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.
இப்போது இந்த பொட்டுகடலை கேக் செய்ய தொடங்கலாம். அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து கரைத்து வைத்திருக்கும் வெல்லக் கரைசலை ஊற்றிக் கொள்ள வேண்டும். ஊற்றிய அந்த வெல்லக் கரைசல் ஒரு கொதி வந்தவுடன், பொடித்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை பொடியை வெல்லக் கரைசலுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பொட்டுக்கடலை பொடி வெல்லக் கரைசலுடன் கொட்டிய 30 வினாடிகளில் கட்டியாக வந்துவிடும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். இந்த கலவையில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றி இரண்டு நிமிடங்கள் கைவிடாமல் கலந்து கொடுத்து கொண்டே இருந்தால் சூப்பரான ஸ்வீட் தயாராக நமக்கு கிடைத்துவிடும். இறுதியாக மீதமிருக்கும் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யை இந்த ஸ்வீடில் ஊற்றி விடுங்கள். (வெல்ல கரைசலில் பொட்டுக்கடலை போட்டவுடன், இறுதியாக ஏலக்காய் பொடி தூவி மூன்றிலிருந்து நான்கு நிமிடத்திற்குள் அடுப்பிலிருந்து இதை கீழே இறக்கி விடலாம்.)
இந்த பொட்டுக்கடலை கேக்கை சூடாக இருக்கும்போதே ஒரு சிறிய தட்டிலோ, ஒரு சிறிய கிண்ணத்திலோ நெய்யை பரவலாகத் தடவி, அதில் ஊற்றி அப்படியே வைத்துவிடவேண்டும். ஆரியவுடன் ஸ்வீட் கிண்ணத்தில் நன்றாக செட் ஆகிவிடும்.
ஆறிய இந்த சுவீட் கலவையை அப்படியே பாத்திரத்தோடு, ஒரு தட்டின் மேலே தலைகீழாக கவிழ்த்தால், நமக்கு சூப்பராக ஸ்வீட் செட்டாகி கிடைத்திருக்கும். ஒரு கத்தியைக் கொண்டு உங்களுக்கு தேவையான ஷேப்பில் இந்த ஸ்வீட்டை வெட்டி தேவைப்பட்டால் மேலே ஒரு முந்திரி பருப்பை வைத்து அழகாக அலங்காரம் செய்து, குழந்தைகளுக்குக் கொடுத்துப் பாருங்கள்.
இந்த ஸ்பீட் செய்ய உங்கள் வீட்டில் வெல்லம் இல்லை என்றாலும் சர்க்கரையில் செய்துகொள்ளலாம். குழந்தைகள் இந்த இனிப்பு ரெசிபியை மிக மிக விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த கேக் இரண்டு நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே இருந்தால் நன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.