- Advertisement -

காலையில் அவசர அவசரமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் அலுவலகத்திற்கு செல்லும் நபர்களுக்கும் ஆரோக்கியமான உணவுப் பொருளை செய்து தர வேண்டும் என்று இல்லத்தரசிகள் நினைப்பார்கள். என்னதான் ஆரோக்கியமாக செய்து கொடுத்தாலும் அதை முழுமையாக சாப்பிட்டால் தானே ஆரோக்கியம் ஏற்படும். அப்படி முழுமையாக சாப்பிடாமல் அரையும் குறையுமாக சாப்பிட்டால் அதில் என்ன இருக்கிறது?

அரையும் குறையுமாக சாப்பிட்டாலும் சிறிதளவாவது உடலில் சத்துக்கள் சேர வேண்டும் என்று நினைப்பவர்களும் இட்லி, தோசை என்று எப்பொழுது போல் செய்யாமல் சற்று ஆரோக்கியமான சிற்றுண்டியை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும், ரவா உப்புமா செய்யலாம் என்று யோசிப்பவர்கள் அதையே சத்து மிகுந்த ரவா உப்புமாவாக மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த டிபனை செய்து பார்க்கலாம். பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ராகி மாவு மற்றும் ரவையையும் வைத்து செய்யக்கூடிய ஒரு ராகி ரவா உப்புமாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • ரவை – ஒரு கப்
  • ராகி மாவு – 1/2 கப்
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – ஒரு டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 1 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிது
  • கொத்தமல்லி – சிறிது
  • இஞ்சி – 1/2 இன்ச்
  • பச்சை மிளகாய் – 3
  • வெங்காயம் – 2
  • கேரட் – ஒரு கப்
  • பீன்ஸ் – ஒரு கப்
  • தக்காளி – ஒன்று
  • தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் – 4 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • நெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, சீரகம், கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.

பிறகு பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து மூடி போட்டு ஒரு நிமிடம் வேக விடுங்கள். ஒரு நிமிடம் கழித்து மூடியை திறந்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு தேங்காய் துருவலை சேர்த்து 20 நொடிகள் மட்டும் வதக்கி விட்டு அதில் தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பையும் சேர்த்து தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

- Advertisement -

அதே நேரத்தில் மற்றும் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் ரவையை சேர்த்து இரண்டு நிமிடம் வறுக்க வேண்டும். பிறகு அதில் ராகி மாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி ஒரு தட்டில் கொட்டி ஆரவைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதித்த பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி விட்டு வறுத்து வைத்திருக்கும் ராகி ரவையை சிறிது சிறிதாக தண்ணீரில் சேர்த்து கட்டி விழாத அளவிற்கு கிண்ட வேண்டும். குறைந்த தீயில் வைத்து நன்றாக கிண்ட வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு எடுத்து வைத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: முளைகட்டிய கொள்ளு கிரேவி செய்முறை

சாதாரண ரவா உப்புமாவை சத்து மிகுந்த ராகி ரவா உப்புமாவாக ஒருமுறை செய்து பாருங்கள். சுவையும் வித்தியாசமாக இருக்கும். ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.

- Advertisement -